ADDED : மே 06, 2026 04:40 PM
l மலைப்பாதை சாலைகளில் செல்லும் போது... l கவனமாக வாகனங்கள் இயக்க அறிவுரை
மேட்டுப்பாளையம்: ஊட்டி சாலை மற்றும் கட்டாஞ்சி மலைப்பாதைகளில் விபத்துகள் நடப்பது அதிகரித்து வருகின்றன. வாகனங்களை மிகவும் நிதானத்துடன் இயக்க வேண்டும் என, போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர். கோடை விடுமுறையை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் -– ஊட்டி சாலை மற்றும் கோத்தகிரி சாலை வழியாக, நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா செல்வோர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுற்றுலா செல்லும் போதும், திரும்பும் போதும், மலைப்பாதைகளில் அவ்வப்போது விபத்து ஏற்படுகின்றன. கடந்த 3ம் தேதி, திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 14 பேர், டெம்போ வேனில் ஊட்டிக்கு சென்று, சுற்றுலா தலங்களை கண்டுகளித்து திரும்பிய போது, கல்லாறு அருகே 2வது வளைவில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சிறிய காயங்களுடன், வாகனங்களில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கடந்த மாதம் 2வது வளைவுக்கு மேல் பகுதிகளில் கார் சாலையோரம் மோதியதில் திடீரென தீ பற்றியது. காரில் இருந்த நால்வர் தப்பினர். அதே போல், காரமடை கட்டாஞ்சி மலைப்பாதையில் கடந்த 2ம் தேதி, காரமடை கூரனுர் பகுதியை சேர்ந்தவர் ஹரிஷ், 28, காரில், தாயனுார் வழியாக கட்டாஞ்சி மலைப்பாதையை நோக்கி சென்றுக்கொண்டிருந்த போது, அடிவாரம் நெருங்கியதும் நிலை தடுமாறி, சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. பள்ளத்தில் நீர் இருந்ததால் மூழ்கியதில், ஹரிஷ் மூச்சுச்திணறி உயிரிழந்தார். எனவே, மலைப்பகுதி சாலைகளில் செல்லும் போது நிதானம் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகையன் கூறுகையில், ‘‘கட்டாஞ்சி மலையில் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது. அவ்வழியாக அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் செல்வோர் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும். மலைப்பாதையில் வாகனத்தை இயக்கும் போது அதிக கவனம் தேவை. மலைப்பாதை மற்றும் அடிவார பகுதியோரங்களில் ஆபத்து பகுதிகள் அதிகம் உள்ளதால், நிதானம் தேவை. வாகனம் நல்ல முறையில் உள்ளதா எனவும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்,’’ என்றார்.
----
