/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு கொப்பரை கொள்முதல் நிறுத்தம்; காலத்தை நீடிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
/
அரசு கொப்பரை கொள்முதல் நிறுத்தம்; காலத்தை நீடிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
அரசு கொப்பரை கொள்முதல் நிறுத்தம்; காலத்தை நீடிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
அரசு கொப்பரை கொள்முதல் நிறுத்தம்; காலத்தை நீடிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 03, 2024 09:26 PM

உடுமலை: அரசு கொப்பரை கொள்முதலை நிறுத்தியதால், வெளி மார்க்கெட்டில் விலை சரிவை சந்தித்து வருகிறது. கொள்முதல் காலத்தை ஆண்டு முழுவதும் நீடிக்கவும், உற்பத்தியை முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கோவை, திருப்பூர் மாவட்டத்தில், தென்னை சாகுபடி அதிகளவு உள்ளது. தென்னை விவசாயிகள், வேர் வாடல் நோய், தேங்காய் மற்றும் கொப்பரை விலை சரிவு உள்ளிட்ட காரணங்களினால், கடுமையாக பாதித்து வருகின்றனர்.
இந்நிலையில், தென்னை விவசாயிகளை பாதுகாக்கும் வகையிலும், தேங்காய், கொப்பரை விலை வீழ்ச்சியை தடுக்கும் வகையிலும், மத்திய அரசின் 'நேபெட்' நிறுவனத்துடன் இணைந்து, தமிழக அரசு ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் அரசு கொப்பரை கொள்முதல் மையம் அமைத்து, விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொப்பரை கொள்முதல் செய்து வந்தது.
நடப்பாண்டு, மார்ச் 12 முதல், ஜூன் 10 வரை, தமிழகத்திலுள்ள, 26 மாவட்டங்களில், 72 ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் வாயிலாக, 88,300 டன் கொப்பரை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இம்மையங்களில், கொப்பரை, கிலோ, ரூ.111.60க்கும், பந்து கொப்பரை, ரூ.120க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. மூன்று மாதம் மட்டுமே, அனுமதி வழங்கப்பட்டது.
அரசு கொள்முதல் காரணமாக, வெளி மார்க்கெட்டில் கொப்பரை விலை உயர்ந்தது. இந்நிலையில், அரசு கொப்பரை கொள்முதல் செய்ய நிர்ணயிக்கப்பட்ட காலம், ஜூன் 10ல், முடிவடைந்தது.
குறைந்த காலம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில், கட்டுப்பாடுகள் காரணமாக, அரசு கொள்முதல் மையங்களில், நிர்ணயிக்கப்பட்ட இலக்கில், 40 சதவீதம் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
அரசு கொப்பரை கொள்முதல் நிறுத்தப்பட்டதால், மீண்டும் கொப்பரை விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஒரு கிலோ கொப்பரை, 140 வரை விற்று வந்த நிலையில், தேங்காய் எண்ணெய்யில் கலப்படம், வட மாநிலங்களுக்கு விற்பனைக்கு செல்வது குறைந்தது, வியாபாரிகள் மற்றும் நிறுவனங்கள் 'சிண்டிகேட்' அமைத்து விலை குறைப்பது உள்ளிட்ட காரணங்களினால், விலை குறைந்தது. அரசு கொப்பரை கொள்முதல் மையங்கள் செயல்பட்ட போது, வெளி மார்க்கெட்டில், ஒரு கிலோ, 110 வரை விற்று வந்தது. கொள்முதல் நிறுத்தப்பட்டதால், மீண்டும் விலை சரிவை சந்தித்து, ரூ.85 முதல், 90 வரை மட்டுமே விற்று வருகிறது.
தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பரமசிவம் கூறியதாவது:
தென்னை சாகுபடியில், நோய்த்தாக்குதல், வறட்சி, விலை வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களினால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெளி மார்க்கெட்டில், கொப்பரை கிலோ, ரூ.85 வரை சரிந்த நிலையில், அரசு கொள்முதல் காரணமாக, ரூ.110 வரை உயர்ந்தது.
தற்போது கொள்முதல் நிறுத்தப்பட்டதால், மீண்டும் கொப்பரை மட்டுமின்றி, தேங்காயும் விலை வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
நோய் தாக்குதல், வறட்சி காரணமாக, மகசூல் குறைந்தது. தென்னையில் தேங்காய், கொப்பரை உற்பத்தி குறித்து அதிகாரிகள் ஆய்வு அடிப்படையில், கடந்த ஆண்டுகளில், ஏக்கருக்கு, ஆயிரம் கிலோ வரை கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டது.
இதில், ஒவ்வொரு விவசாயிகளிடமும், நான்கு முறை கொள்முதல் செய்யப்பட்டது. நடப்பாண்டு, ஏக்கருக்கு, 260 என்ற அளவில் குறைக்கப்பட்டதால், விவசாயிகளுக்கு பயனில்லை.
கொள்முதல் இலக்கும் எட்டப்படாத நிலையில், கொள்முதல் நிறுத்தப்பட்டது. இதனால், மீண்டும் விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
கடந்தாண்டு, ஆறு மாதம் கொள்முதல் செய்யப்பட்டதோடு, விவசாயிகள் கோரிக்கை அடிப்படையில். மேலும் இரு மாதங்கள் நீடிக்கப்பட்டது.
அதே போல், நடப்பாண்டும், கொள்முதல் காலத்தை நீடிக்க வேண்டும். கட்டுப்பாடுகளை நீக்கி, விவசாயிகள் உற்பத்தி செய்யும் கொப்பரை முழுவதையும் கொள்முதல் செய்யப்படவேண்டும்.
தென்னையில் ஏற்பட்டுள்ள நோய் தாக்குதலால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆதார விலையையும் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தார்.