/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலையில் ஜல்லிக்கற்கள் சிதறல்; திணறும் வாகன ஓட்டுநர்கள்
/
சாலையில் ஜல்லிக்கற்கள் சிதறல்; திணறும் வாகன ஓட்டுநர்கள்
சாலையில் ஜல்லிக்கற்கள் சிதறல்; திணறும் வாகன ஓட்டுநர்கள்
சாலையில் ஜல்லிக்கற்கள் சிதறல்; திணறும் வாகன ஓட்டுநர்கள்
ADDED : மார் 13, 2025 11:31 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி தலைமை அரசு மருத்துவமனை எதிரே உள்ள ரவுண்டானா பகுதியில், சாலையில் ஜல்லிக்கற்கள் சிதறிக் கிடந்ததால், வாகன ஓட்டுநர்கள் திணறினர்.
பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களின் பல இடங்களில், கல் குவாரிகள், கிரஷர்கள் இயங்கி வருகின்றன. இங்கிருந்து, ஜல்லிக்கற்கள், 'எம் சாண்ட்' உள்ளிட்டவை பிற மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்துக்கும் லாரிகளில் எடுத்து செல்லப்படுகின்றன.
அப்போது, ஜல்லிக்கற்கள் மீது தார்ப்பாலின் கொண்டு மூடாமல் லாரிகள் செல்வதால் சாலையில் சிதறுகின்றன. இதேபோல, எம்.சாண்ட் ஏற்றி செல்லும் லாரிகளில் இருந்தும், துாசி பறந்து இரு சக்கர வாகன ஓட்டுநர்கள், பாதசாரிகள் உள்ளிட்டோருக்கு சிரமம் ஏற்படுகிறது.
பொள்ளாச்சி தலைமை அரசு மருத்துவமனை எதிரே உள்ள ரவுண்டானா பகுதியில் நேற்று காலை, ஜல்லிக்கற்கள், சாலையில் பரவலாக சிதறி கிடந்தன. தகவல் அறிந்த கவுன்சிலர் சாந்தலிங்கம், சம்பவ இடத்திற்கு நகராட்சி ஊழியர்களை வரவழைத்தார். அவர்கள், சாலையில் சிதறிக் கிடந்த ஜல்லிக் கற்களை அப்புறப்படுத்தினர்.
மக்கள் கூறியதாவது:
கனரக வாகனங்களில், ஜல்லிக்கற்கள், 'எம் சாண்ட்' உள்ளிட்டவை நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாகவே கொண்டு செல்லப்படுகிறது. இதனை மூடி பாதுகாப்பாக கொண்டு செல்வதும் கிடையாது.
திறந்த நிலையில் அதிக அளவில் ஜல்லிக்கற்கள் கொண்டு செல்லும் போது, வேகத்தடையில் ஏறி இறங்கும்போதும், வளைவில் திரும்பும் போது, சிதறி கீழே விழுகின்றது. இதனால், அருகில் இரு சக்கர வாகனங்கள், கார் உள்ளிட்ட இலகு ரக வாகனங்களில் செல்வோர் அச்சத்தில் உறைகின்றனர்.
எனவே, கற்கள் ஏற்றி வரும் லாரிகளில், தார்ப்பாலின் கொண்டு மூடப்பட்டுள்ளதா என்பதை துறை ரீதியான அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.