/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி: விவசாயிகளுக்கு விளக்கம்
/
நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி: விவசாயிகளுக்கு விளக்கம்
நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி: விவசாயிகளுக்கு விளக்கம்
நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி: விவசாயிகளுக்கு விளக்கம்
ADDED : மார் 07, 2025 08:20 PM
ஆனைமலை :
ஆனைமலை அருகே, விவசாயிகளுக்கு நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி முகாம் நடந்தது.
ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையம் சார்பில், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக அகில இந்திய ஒருங்கிணைந்த நிலக்கடலை ஆராய்ச்சி திட்டத்தின் கீழ், நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி, ஆனைமலை அருகே காளியாபுரத்தில் நடந்தது.
தென்னை ஆராய்ச்சி நிலைய தலைவர் சுதாலட்சுமி தலைமை வகித்து, மண் பரிசோதனை அடிப்படையில் நிலக்கடலை சாகுபடி முறைகளையும், ஊட்டச்சத்து மேலாண்மை முறை குறித்து விளக்கினார்.
மேலும், அவர் பேசியதாவது:
ஆந்திராவில் உள்ள கதிரி என்ற இடத்தில் அமைந்துள்ள என்.ஜி. ரங்கா விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தால் நிலக்கடலை பயிரில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட, கதிரி லெப்பாக்சி ரகமானது, வறட்சியை மற்றும் வெள்ளத்தை தாங்கி வளரும் திறன் கொண்டது.
இந்த ரகமானது ஒரு ெஹக்டேருக்கு, 15 முதல், 20 குவிண்டால் மகசூல் தர வல்லது. 51 சதவீதம் எண்ணெய் சத்து உடையது. பூச்சி நோயை தாங்கி வளரும். கதிரி லெப்பாக்சி ரகம் ஒரு செடியிலிருந்து, 160 முதல், 180 காய்களை கொடுக்கக்கூடியது. அதிக புரதச்சத்து உள்ளது.
இவ்வாறு, பேசினார்.
திட்ட அலுவலர் முனைவர் ராதாஜெயலட்சுமி (பயிர் நோயியியல் உதவி பேராசிரியர்) பேசுகையில், ''ஒரு கிலோ நிலக்கடலை விதைக்கு டிரைக்கோடெர்மா விரிடி, 4 கிராம் என்றளவில் விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
மேலும், வேர் அழுகல், தண்டு அழுகல், நாற்று அழுகல், இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்த மேங்கோசெப், 0.1 சதவீதம் தெளிக்க வேண்டும். மண்ணில் உழவு செய்யும் போது, 2.5 கிலோ டிரைக்கோடெர்மா விரிடி ஒரு ெஹக்டேருக்கு துாவி உழவ செய்ய வேண்டும்,'' என்றார்.
வேளாண் பூச்சியியல் இணை பேராசிரியர் அருள்பிரகாஷ் பேசுகையில், ''இலை சுருட்டு புழு தாக்குதலை கட்டுப்படுத்த, மோனோகுரோட்டாபாஸ்,3 மில்லி மற்றும் ஒட்டு திரவம் ஒரு மில்லி அளவை, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்,'' என்றார்.
நிலக்கடலையில் தோன்றும் பிற பூச்சி கட்டுப்பாடு முறைகள் குறித்து விளக்கப்பட்டது. பயிற்சியில், 30க்கும் மேற்பட்ட நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகள் பங்கேற்று, சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து பயன்பெற்றனர்.
நிலக்கடலை பயிருக்கு தேவையான எரு மற்றும் உரங்களின் அளவு மற்றும் பயன்படுத்தும் முறைகள் குறித்து விளக்கப்பட்டது.