/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிலக்கடலை விதைப்பண்ணை; அதிகாரி கள ஆய்வு
/
நிலக்கடலை விதைப்பண்ணை; அதிகாரி கள ஆய்வு
ADDED : பிப் 21, 2025 11:15 PM
அன்னுார்; அதிக மகசூல் தரும் நிலக்கடலை பயிர் ரகத்தை பயிரிட விதை சான்று அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.
அன்னூர் வட்டாரத்தில் பொகலூர் மற்றும் அன்னூர் பகுதிகளில் உள்ள நிலக்கடலை விதை பண்ணைகளை கோவை விதைச்சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து கள ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது அவர் விவசாயிகளிடம் கூறியதாவது, ''கதிரி லெபாக்சி மற்றும் டி.எம்.வி., 14 ஆகிய ரகங்கள் விதைப்பண்ணைக்கு ஏற்றவை. எண்ணெய் வித்துக்களின் அரசன் நிலக்கடலை பயிராகும். இதில் டி.எம்.வி., 14 என்கிற ரகம் 2019ம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டது. இந்த ரகம் 95 முதல் 100 நாட்களில் முதிர்ச்சி அடையக் கூடியது.
ஒரு எக்டருக்கு, 2200 கிலோ மகசூல் தரக்கூடியது. மேலும் 48 சதவீதம் எண்ணை சத்துக் கொண்டது. இதனை சரியான இடைவெளியில் பயிரிடுவதன் வாயிலாக மகசூல் அதிகரிக்கும். பயிரிட்ட 45வது நாளில் களை எடுத்து, ஜிப்சம் உரத்தை அளித்து மண் அணைப்பதன் மூலம் விழுதுகள் கீழே இறங்கி நன்கு காய் பிடிக்க வசதியாக அமையும்.
மேலும் பிற கலவன்களை அகற்ற வேண்டும். இதனால் விதைகளில் புறத்துாய்மை, இனத்துாய்மை நல்ல முறையில் பராமரிக்கப்படும். பராமரிப்பு பணிகளை சரியான நேரத்தில் செய்வதால் தரமான விதைகளை உற்பத்தி செய்து விவசாயிகள் பயன்படுத்தலாம்,'' என்றார்.
ஆய்வின் போது விதைச்சான்று அலுவலர் ஹேமலதா, உதவி விதை அலுவலர் சரவணகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.