/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புற்றுநோயாளிகளுக்காக முடி தானம்
/
புற்றுநோயாளிகளுக்காக முடி தானம்
ADDED : மே 05, 2024 12:21 AM

போத்தனுார்;புற்றுநோயாளருக்காக முடி தானம் வழங்கும் நிகழ்வு ஈச்சனாரி அபிராமி செவிலியர் கல்லுாரியில் நடந்தது. அபிராமி கல்வி குழும தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார்.
இந்திய பயிற்சி பெற்ற செவிலியர் சங்க தென் மண்டல துணை தலைவர் டாக்டர் ஜேனி கெம்ப் பேசுகையில், ''புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு தரப்படும் சிகிச்சையால் முடி கொட்டுவது தவிர்க்க முடியாது.
இதனால் மனரீதியாக கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர். அவர்களின் மன மகிழ்ச்சிக்காக, முடி தானம் செய்வது தற்போது பெருகி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மே, 12 செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்திய பயிற்சி பெற்ற செவிலியர் சங்க தமிழ்நாடு கிளை இவ்வாண்டு செவிலியர் தினம் முன்னிட்டு, புற்றுநோயாளிகளுக்காக அதிகளவில் செவிலியர்கள் முடி தானம் செய்யும் நிகழ்வை துவக்கியுள்ளது.
இதன் கோவை மண்டலம் சார்பாக இங்கு இந்நிகழ்வு நடக்கிறது. செவிலியர்கள் தானம் தரும் முடி, நாம் காணாத யாரோ ஒரு புற்றுநோயாளியின் மனக்குறையை நீக்குகிறது.
அதனால் அனைவரும் மனமுவந்து, புன்னகையுடன் முடி தானம் தர வேண்டும். மாநிலம் முழுவதும் 15 இடங்களில் இந்நிகழ்வு நடக்கிறது. வரும், 8ம் தேதி சென்னையில் இந்நிகழ்வு ஆசிய மற்றும் இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பெறும் வகையில் நடக்கவுள்ளது'' என்றார்.
முன்னதாக கல்லூரி முதல்வர் டாக்டர் ரேணுகா வரவேற்றார்.
அபிராமி நிறுவன இயக்குனர்களான டாக்டர்கள் செந்தில்குமார், பாலமுருகன், இந்திய பயிற்சி பெற்ற செவிலியர் சங்க தமிழ்நாடு கிளை செயற்குழு உறுப்பினர் டாக்டர் ஜெயசுதா உள்ளிட்டோர் பேசினர்.
தொடர்ந்து, அபிராமி செவிலியர் கல்லூரியின், ஒரு ஆசிரியர், 35 மாணவர்கள் உள்பட, 15 செவிலிய ஆசிரியர்கள், 150 மாணவிகள், 17 கல்லூரிகளிலிருந்து பங்கேற்று முடி தானம் செய்தனர்.