/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வரி வசூல் செய்ய கையடக்க கருவிகள்
/
வரி வசூல் செய்ய கையடக்க கருவிகள்
ADDED : ஆக 07, 2024 11:21 PM

பெ.நா.பாளையம் : கோவை மாவட்டத்தில் கூடலூர் நகராட்சியில் வரி வசூல் செய்ய வரி வசூலர்களுக்கு கையடக்க கருவிகள் வழங்கப்பட்டன.
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் நகராட்சியில் பணியாற்றும் பில் கலெக்டர்களுக்கு, வரிகளை விரைவாக வசூல் செய்யவும், அதே இடத்தில் ரசீதுகளை வழங்கவும், கையடக்க கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக குடிநீர், சொத்து, தொழில், காலி இடம் உள்ளிட்ட வரிகளை உடனுக்குடன் வசூல் செய்து, இந்த கருவிகள் வாயிலாக ரசீதுகள் வழங்க முடியும். இந்த ரசீதில் வழங்கிய நேரம், வரி விதிப்பு எண் மற்றும் தொடர்புடைய நபரின் முகவரி, எந்த ஆண்டுக்கான வரி உள்ளிட்ட அனைத்து விபரங்களும் உள்ளடங்கி இருக்கும். பொது மக்கள் அலுவலகத்துக்கு நேரில் வந்து வரிகளை செலுத்தும் அலைச்சல் இல்லை.
அவரவர் வீட்டிலேயே தொகையை செலுத்தி ரசீதுகளை இந்த கருவி வாயிலாக பெற்றுக் கொள்ள முடியும். இதனால் தேவையற்ற அலைச்சலும், மன அழுத்தமும் குறையும். இந்த ரசீது பெற்றவர்கள் விரும்பினால், கூடலூர் நகராட்சி அலுவலகத்துக்கு நேரில் வந்து, வழக்கமாக வழங்கப்படும் ரசீதுகளை பெற்றுக் கொள்ளலாம்.
இது குறித்து, கூடலூர் நகராட்சி தலைவர் அறிவரசு கூறுகையில், கோவை மாவட்டத்தில் கூடலூர் நகராட்சியில், இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது விரைவான வரி வசூலுக்கு உதவும். இதைக் கொண்டு பல்வேறு வளர்ச்சி பணிகளை விரைவாக மேற்கொள்ள முடியும் என்றார். நிகழ்ச்சியில், கமிஷனர் மனோகரன், மேனேஜர் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.