/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சூலுார், சுல்தான்பேட்டையில் மழையால் மகிழ்ச்சி
/
சூலுார், சுல்தான்பேட்டையில் மழையால் மகிழ்ச்சி
ADDED : மே 12, 2024 11:12 PM

சூலுார்;சூலுார், சுல்தான்பேட்டையில் பெய்த மழையால் வெயில் தாக்கம் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தாண்டு கோடையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், விவசாயிகள், மக்கள் மழையை எதிர்பார்த்து இருந்தனர். வெயிலால், மக்கள் மட்டுமின்றி கால்நடைகளும் பாதிப்புக்கு உள்ளாகின. அக்னி நட்சத்திரமும் துவங்கியதால், மக்கள் மேலும் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் சூலுார், சுல்தான்பேட்டை வட்டாரத்தில் பரவலாக மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் ஓடியது. அரசூரில், 8 மி.மீ., மழை பதிவாகியது. செலக்கரச்சல் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால், பல ஆண்டுகளாக வறண்டு கிடந்த கருவேலங்குட்டைக்கு மழை நீர் ஓரளவுக்கு வந்துள்ளது. மழையால், வெயிலின் தாக்கம் குறைந்து இதமான சீதோஷ்ண நிலை உருவானதால், விவசாயிகளும், மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்,' சில பேர் கோடை உழவு செய்துள்ளனர். பலரும் கோடை உழவு செய்ய ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். தொடர்ந்து மழையை எதிர்பார்த்து உள்ளோம்,' என்றனர்.