/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை
/
கோவையின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை
ADDED : மார் 11, 2025 11:51 PM

கோவை; வழிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, கோவையின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
பூமத்திய ரேகையை ஒட்டிய, வடகிழக்கு இந்திய பெருங்கடல், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அனேக இடங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில், நேற்று இடி மின்னலுடன், மிதமான மழை பெய்யலாம் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், கோவையில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் குறைவாகவே இருந்தது. மாலை 5:00 மணிக்கு பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டியது.
குறிப்பாக காந்திபுரம், கணபதி, சிவானந்தா காலனி, கவுண்டம்பாளையம், டவுன்ஹால், மணியகாரன்பாளையம், அவிநாசி ரோடு, பேரூர், புலியகுளம், ராமநாதபுரம், சுந்தராபுரம், மதுக்கரை, போத்தனுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
தொடர்ந்து அரைமணி நேரத்துக்கும் மேல், கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக, பல்வேறு பகுதிகளிலும், மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. திடீர் மழையால் கடந்த சில தினங்களாக வாட்டிய வெப்பம் தணிந்தது. மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.