/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேர்வாடல் நோய் பாதித்த தென்னைக்கு நிவாரணம் விவசாயிகளுக்கு தோட்டக்கலை அழைப்பு
/
வேர்வாடல் நோய் பாதித்த தென்னைக்கு நிவாரணம் விவசாயிகளுக்கு தோட்டக்கலை அழைப்பு
வேர்வாடல் நோய் பாதித்த தென்னைக்கு நிவாரணம் விவசாயிகளுக்கு தோட்டக்கலை அழைப்பு
வேர்வாடல் நோய் பாதித்த தென்னைக்கு நிவாரணம் விவசாயிகளுக்கு தோட்டக்கலை அழைப்பு
ADDED : ஏப் 27, 2024 12:19 AM
பொள்ளாச்சி;'பொள்ளாச்சி பகுதியில், கேரள வேர் வாடல் நோயால் பாதிக்கப்பட்ட மரங்களுக்கு நிவாரணம் பெற விவசாயிகள் அணுகலாம்,' என, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி வடக்கு, தெற்கு மற்றும் ஆனைமலை பகுதிகளில், தென்னை முக்கிய பயிராக சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வேர் முதல் அனைத்தும் பயன்பாடு உள்ளதால், தென்னையை சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்நிலையில், கடந்த, மூன்று ஆண்டுகளுக்கு மேலாக கேரள வேர் வாடல் நோய் பாதிப்பு அதிகரித்துள்ளதால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
வாழ்வாதாரம் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின், பொள்ளாச்சி பகுதியில் வேர் வாடல் நோய் பாதித்த மரங்களை வெட்டி அகற்றுவதற்காக, 14 கோடியே, நான்கு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தார்.
மேலும், மூன்று லட்சம் தென்னங்கன்றுகள், 2 கோடியே, 80 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இலவசமாக வழங்க உத்தரவிட்டார்.அதன்படி, வேர்வாடல் நோயால் பாதிக்கப்பட்ட மரங்களை கண்டறிந்து விவசாயிகளுக்கு நிவாரண தொகையை வழங்கும் பணியில் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஆனைமலை மற்றும் வடக்கு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர்கள் கோபிநாத், ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
கேரள வேர் வாடல் நோய் தீவிரமாக பாதிக்கப்பட்ட மரங்களை வெட்ட, தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஒரு விவசாயிக்கு, ஒரு ெஹக்டருக்கு, 32 மரங்களுக்கு தலா, ஆயிரம் ரூபாய் என, மொத்தம், 32 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ஒரு விவசாயிக்கு, அதிகபட்சம், 32 மரங்களுக்குத்தான் வழங்க முடியும்.
மேலும், தென்னை மரக்கன்றுகள், 40 - 80 எண்கள் வழங்கப்படுகிறது.நோய் தாக்கப்படாத மரங்களை காப்பாற்ற ஊட்டச்சத்துகள், டானிக், நுண்ணுயிர் உரங்கள் வழங்கப்பட உள்ளது. விவசாயிகள்,சிட்டா, அடங்கல், உரிமை சான்று, ரேஷன் கார்டு நகல், ஆதார் நகல், வங்கி பாஸ்புக் நகல், போட்டோ இரண்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் அணுகலாம்.
தென்னை வேர் வாடல் நோய் நிவாரணம் கிடைக்கப்பெறாத விவசாயிகள், தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
மேலும், விவசாயிகள் தோட்டங்களுக்கு சென்று நேரடியாக கள ஆய்வு செய்து போதிய அறிவுரைகளும் வழங்கப்படுகிறது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

