/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மலையாள படத்துக்காக தயாராகும் ஓட்டல்! சூடுபிடிக்கும் சினிமா ஷூட்டிங்
/
மலையாள படத்துக்காக தயாராகும் ஓட்டல்! சூடுபிடிக்கும் சினிமா ஷூட்டிங்
மலையாள படத்துக்காக தயாராகும் ஓட்டல்! சூடுபிடிக்கும் சினிமா ஷூட்டிங்
மலையாள படத்துக்காக தயாராகும் ஓட்டல்! சூடுபிடிக்கும் சினிமா ஷூட்டிங்
ADDED : பிப் 21, 2025 11:08 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், மலையாள சினிமா படத்துக்காக பிளைவுட்டால் ஓட்டல் அமைக்கப்படுகிறது. மீண்டும் சினிமா படப்பிடிப்பு அதிகரித்துள்ளதால் களைகட்டியுள்ளது.
பொள்ளாச்சி என்றாலே, பச்சை பசேலென வயல்வெளிகள், உயரமாக வளர்ந்து நிற்கும் தென்னை மரங்கள் தான் நினைவுக்கு வரும்.
சினிமா எடுக்க வேண்டுமென்றால், இயக்குனர்கள் சட்டென தேர்வு செய்யும் இடமாக பொள்ளாச்சி இருந்தது. இங்கு எடுக்கப்படாத படங்களே இல்லை என்றும் கூறும் அளவுக்கு மினி கோடம்பாக்கமாக மாறியுள்ளது.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக சினிமா படப்பிடிப்பு பொள்ளாச்சியில் குறைந்து காணப்பட்டது. சினிமா சார்ந்த வேலை பார்த்தோர் அனைவரும் பாதித்தனர்.
இந்நிலையில், பொள்ளாச்சியில் மீண்டும் சினிமா படப்பிடிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது, மலையாள படத்துக்காக உண்மையான ஓட்டல் போன்று பிளைவுட்களை கொண்டு ெஷட் அமைக்கப்படுகிறது.
கடந்த, ஒரு வாரமாக பொள்ளாச்சி நகராட்சி கட்டபொம்மன் வீதியில், ஓட்டலை வடிவமைக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதை பார்க்கும் பொதுமக்கள், மொபைல்போனில் படம் பிடித்து சமூகவலைதளங்களில் பதிவிடுவதால் வைரலாகி வருகிறது.
சினிமா லொக்கேஷன் மேலாளர், பொள்ளாச்சி ராஜா என்கிற முத்துராமன் கூறியதாவது:
கடந்த, 33 ஆண்டுகளாக சினிமா லொக்கேஷன் மேலாளராக உள்ளேன். படம் எடுக்க பொள்ளாச்சியை தேர்வு செய்கின்றனர். சினிமா நடிகர்கள் வந்தால், தொந்தரவு செய்யாமல் நடிப்பை பார்த்து ரசிக்கும் மக்கள், கேரளா மாநிலத்தையொட்டி அமைந்துள்ளதால் கலாசாரம், சீதோஷ்ண நிலை போன்ற காரணங்களினால், பொள்ளாச்சியை தேர்ந்தெடுக்கின்றனர். மேலும், பொள்ளாச்சியில் படம் எடுத்தால் வெற்றி பெறும் என்ற ராசியும் உள்ளது.
மலையாள படங்களுக்கு ஏற்ற வகையில் இடங்கள் உள்ளதால் இங்கு வருகின்றனர். பொள்ளாச்சியில் காண்பிக்காத இடங்களே இல்லாத அளவுக்கு படப்பிடிப்புகள் நடந்துள்ளது. சில காலங்கள் படப்பிடிப்பு அதிகளவு நடக்கவில்லை.
மேலும், கிராமத்து கதைகள் இல்லாமல், நகரத்தையொட்டியே கதைகள் இருந்ததால், இங்கு ஷூட்டிங் குறைந்து காணப்பட்டது. கடந்த காலங்களில், 50 - 70 நாட்கள் வரை படப்பிடிப்பு நடக்கும். இங்குள்ள விடுதிகளில் தங்குவதற்கு முதலிலயே புக்கிங் நடைபெறும். தற்போது, மூன்று வாரம் அல்லது ஒரு வாரம் மட்டுமே படப்பிடிப்புகள் நடக்கின்றன.
கடந்தாண்டு மலையாளம், தமிழ் என, 20 படங்கள் இங்கு எடுக்கப்பட்டன. இந்தாண்டு இதுவரை, ஆறு படங்கள் முடித்து, ஏழாவதாக மலையாள படம் எடுக்கப்படுகிறது. இதை பார்க்கும் போது, மீண்டும் ஷூட்டிங் களைகட்டியுள்ளது தெரிகிறது.
தற்போது, இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கும் ஒரு மலையாள படத்துக்காக,பொள்ளாச்சியில் இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்த ஓட்டல் உண்மையாக இருக்க வேண்டுமென்பதற்காக கடந்த ஒரு வாரமாக பிளைவுட் பயன்படுத்தி ெஷட் அமைக்கப்படுகிறது. இயக்குனர், விரைவில் 'திரிஷயம் 3' படம் எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
இவ்வாறு, அவர் கூறினார்.