/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓட்டுகள் எண்ணுவது எப்படி? மே 23ல் பயிற்சி
/
ஓட்டுகள் எண்ணுவது எப்படி? மே 23ல் பயிற்சி
ADDED : மே 17, 2024 01:00 AM
கோவை;கோவை லோக்சபா தொகுதியில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு, 23ம் தேதி பயிற்சி அளிக்கப்படுகிறது.
கோவை லோக்சபா தொகுதியில் பயன்படுத்திய ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஜி.சி.டி., கல்லுாரியில் உள்ள, 'ஸ்ட்ராங் ரூம்'களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. ஜூன் 4ல் ஓட்டுகள் எண்ணப்பட உள்ளன.
கோவை வடக்கு, தெற்கு, சிங்காநல்லுார், சூலுார் ஆகிய தொகுதிகளுக்கு தலா, 14 டேபிள்கள், பல்லடம் தொகுதிக்கு, 18 டேபிள்கள், கவுண்டம்பாளையம் தொகுதிக்கு, 20 டேபிள்கள் போடப்படுகின்றன.
ஒரு டேபிளுக்கு ஒரு மைக்ரோ அப்சர்வர், ஒரு ஓட்டு எண்ணிக்கை கண்காணிப்பாளர், ஒரு உதவியாளர் என மூவர் வீதம் நியமிக்கப்பட்டு உள்ளனர். 20 சதவீத ஊழியர்கள் 'ரிசர்வ்' அடிப்படையில் இருப்பர்.
இதன்படி, பல்லடம் - 66, சூலுார் - 51, கவுண்டம்பாளையம் - 72, கோவை வடக்கு - 51, தெற்கு - 51, சிங்காநல்லுார் - 51, தபால் ஓட்டுகள் எண்ணுவதற்கு 35 ஊழியர்கள் என, மொத்தம், 377 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு, கன்ட்ரோல் யூனிட் இயந்திரங்களை பெட்டியில் இருந்து எப்படி எடுப்பது; 'சீல்' அகற்றுவது எப்படி; எவ்வாறு 'ஆன்' செய்வது; பட்டனை அமுக்கி, வேட்பாளர்களின் ஏஜன்ட்டுகளுக்கு காண்பிப்பது; பதிவான ஓட்டு விபரங்களை, அதற்குரிய படிவத்தில் குறிப்பிட்டு, கையெழுத்திட்டு, உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது தொடர்பாக கற்றுத்தர வேண்டும்.
இப்பணிகளை மேற்கொள்ளும் அலுவலர்களுக்கு, வரும், 23ம் தேதி (வியாழக்கிழமை) காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை, ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.
முடிவுகள் தாமதமாகும்
'ஓட்டு எண்ணும் பணிக்கு தேவையான அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர். அவர்களுக்கு முதல்கட்ட பயிற்சி, 23ல் நடத்தப்படும். தேவைப்பட்டால் மீண்டும் ஒருமுறை அளிக்கப்படும். ஓட்டுகள் பதிவாகியுள்ள கன்ட்ரோல் யூனிட் இயந்திரத்தை எவ்வாறு கையாள்வது என சொல்லிக் கொடுக்கப்படும். கோவை லோக்சபா தொகுதியில், 37 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளதால், சுற்று முடிவுகள் அறிவிக்க தாமதமாகும்.
- தேர்தல் பிரிவினர்

