/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சொத்து வாங்கும் போது 'லீகல் ஒப்பீனியன்' முக்கியம் பெறத் தவறினால் பிற்பாடு பல சிக்கல்களை சந்திக்கணும்
/
சொத்து வாங்கும் போது 'லீகல் ஒப்பீனியன்' முக்கியம் பெறத் தவறினால் பிற்பாடு பல சிக்கல்களை சந்திக்கணும்
சொத்து வாங்கும் போது 'லீகல் ஒப்பீனியன்' முக்கியம் பெறத் தவறினால் பிற்பாடு பல சிக்கல்களை சந்திக்கணும்
சொத்து வாங்கும் போது 'லீகல் ஒப்பீனியன்' முக்கியம் பெறத் தவறினால் பிற்பாடு பல சிக்கல்களை சந்திக்கணும்
ADDED : ஜூன் 01, 2024 12:48 AM

எப்பாடு பட்டாவது சொந்தமாக நிலம் வாங்க வேண்டும். அதில் வீடு கட்ட வேண்டும். என் சம்பாத்தியத்தில் வாங்கி விட்டேன் என்ற முழு திருப்தி கிடைக்கும் என்று மனதுக்குள் ஆசை கோட்டை கட்டி, அதை செயல்படுத்தியவர்கள் இன்று ஏராளம்.
வங்கிக் கடன் இதற்கு கை கொடுக்கிறது. சிறிது காலத்துக்கு பின், கட்டிய வீட்டில், வாங்கிய மனையில் ஏதாவது பிரச்னை என்றால், அப்போது சட்ட வல்லுனர்களை தேடிப் போக வேண்டியிருக்கிறது.
அதற்கு முன்னதாகவே, இவர்களை அணுகி விட்டால், வீடு, நிலம் சம்பந்தமான பிரச்னை இருக்காது. இதற்கு தான் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது, சட்ட கருத்துரு (லீகல் ஒப்பீனியன்).
இது ஏன் அவ்வளவு முக்கியமாக பார்க்க வேண்டும் என்று வழிகாட்டுகிறார், வழக்கறிஞர் வடவள்ளி நாகராஜன்.
அவர் கூறியதாவது:
வீடு, நிலம் வாங்கும் போது, சட்டக் கருத்துரு மிக முக்கியம். சட்டக் கருத்துரு பெற வருபவர்கள், 30 வருடங்களுக்கு உண்டான தாய் பத்திரம், சொத்து விற்பனை செய்தவர் ஒரு வேளை இறந்து விட்டால், இறப்பு சான்றிதழ் மற்றும் இறந்தவரின் வாரிசு இவர்கள்தான் என்பதற்கான, வாரிசு சான்றிதழ் கொண்டு வர வேண்டும்.
குறிப்பிட்ட இடம் டீ.டி.சி.பி., அங்கீகாரம் பெற்றதா, ஆக்கிரமிப்பில் இருக்கிறதா, விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ள, அரசால் கையகப்படுத்தப்பட்டு இருக்கிறதா, இடத்தின் மீது ஏதாவது வழக்கு நிலுவையில் உள்ளதா என்பது, 'லீகல் ஒப்பீனியன்' வாயிலாக அறிய முடியும்.
குறிப்பிட்ட நிலம், அரசு புறம்போக்கா, பஞ்சமி நிலமா, பள்ளவாரியில் இருக்கிறதா, நீர் நிலை ஆக்கிரமிப்பில் இருக்கிறதா என்பதையும், முழுவதுமாக தெரிந்து கொள்ள முடியும்.
வில்லங்கம் இல்லாமல் சொத்து வாங்க வேண்டும். நிலம் வாங்கும் போது, முதலில் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று, நீங்கள் வாங்க இருக்கும் நிலத்தின் சர்வே எண்ணை குறிப்பிட்டு, மேற்கண்ட விபரங்களை சரிபார்த்துக் கொள்வது நல்லது.
இதையெல்லாம் அறியாமல் நிலம் வாங்கினால், சிக்கல்கள் காரணமாக, வங்கி கடன் மற்றும் பிளான் அப்ரூவல் கிடைக்காது.
உதாரணமாக, இரண்டு ஏக்கர் நிலத்தில் மனை பிரிக்கப்படும் போது, அதில் 10 சதவீதம், பூங்கா, குழந்தைகளுக்கான விளையாட்டு திடல் உட்பட இன்ன பிற வசதிகளுக்கு விடப்பட வேண்டும்.
அது முறையாக இருக்கிறதா, இல்லை குறிப்பிட்ட வசதிகளுக்கு இடம் ஒதுக்காமல் முழுவதுமாக விற்பனை செய்து விட்டார்களா என, அறிந்து கொள்ள வேண்டும்.
உயில் படி ஒருவருக்கு சொத்து வந்திருந்தால், உயில் எழுதி வைத்தவர், தன்னுடைய வாழ்நாளில் அதை ரத்து செய்து விட்டாரா என, சார் பதிவாளர் அலுவலகத்தில் சரி பார்க்க வேண்டும்.
பவர் எழுதி கொடுத்தவர் உயிருடன் இருக்கிறாரா என்று சரிபார்த்து, அவர் இறந்திருந்தால், பவர் வாங்கியவர், இறந்தவரின் வாரிசுகளிடம், மீண்டும் பவர் வாங்கியிருக்கிறாரா என சரிபார்க்க வேண்டும்.
கட்டிய வீட்டை வாங்கும் போது, அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தை வாங்கி பரிசோதிக்க வேண்டும். இதில் விதிமீறல் இருந்தால், வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
'அன் அப்ரூவ்டு' சைட்களை, வரன்முறைப்படுத்தியிருந்தாலும், அந்த இடங்களில், நிலம் வாங்குவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், குறிப்பிட்ட வசதிகளுக்கான இடம் ஒதுக்காமல் இருப்பர்.
பின்னாளில், அங்கு குடியிருப்பவர்கள் பல சிக்கல்களை சந்திக்க நேரிடலாம். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் பேனல் வழக்கறிஞர்களிடம், சட்டக் கருத்துரு பெற்றுக் கொள்வது நல்லது.
இவ்வாறு, அவர் கூறினார். தொடர்புக்கு: 98422 50145.

