/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பேரைச் சொன்னா' அதிருதில்ல...! வேட்பாளர் வெற்றிக்குப் பின்னணி
/
'பேரைச் சொன்னா' அதிருதில்ல...! வேட்பாளர் வெற்றிக்குப் பின்னணி
'பேரைச் சொன்னா' அதிருதில்ல...! வேட்பாளர் வெற்றிக்குப் பின்னணி
'பேரைச் சொன்னா' அதிருதில்ல...! வேட்பாளர் வெற்றிக்குப் பின்னணி
ADDED : ஏப் 10, 2024 11:26 PM
சட்டசபைக்கான தேர்தலைப் போன்று, லோக்சபா தேர்தலில் வேட்பாளர்களின் பெயர்களுடன் வாக்காளர்கள் அவ்வளவாகப் பரிச்சயமாவதில்லை. பிரபல வேட்பாளர்கள் என்றால் பெயர்களைப் 'பட்'டென்று சொல்லும் வாக்காளர்கள், பிற வேட்பாளர்களை எளிதாக மனதில் இருத்திக்கொள்வதில்லை.
கோவை பா.ஜ., வேட்பாளர் என்றால் உடனடியாக 'அண்ணாமலை' என்று வாக்காளர்கள் பலரும் 'பளிச்'சென்று சொல்லிவிடுகின்றனர் - அண்ணாமலைக்கு வாக்களிப்பவராக இருந்தாலும் சரி; எதிர்ப்பாளராக இருந்தாலும் சரி.
தி.மு.க., வேட்பாளர் கணபதி ராஜ்குமார்(முன்னாள் மேயர்); அ.தி.மு.க., வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோரது பெயர்களை, வாக்காளர் பலரும் கூட்டியே, குறைத்தோ அல்லது தவறுதலாகவோதான் சொல்கின்றனர் - அந்த வாக்காளர்கள் தி.மு.க.,வுக்கோ, அ.தி.மு.க.,வுக்கோ ஓட்டு அளிப்பவர்களாக இருந்தாலும்.
நீலகிரி தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் ராஜா - பா.ஜ., வேட்பாளர் முருகன் பெயர்கள் பரிச்சயம். வாக்காளர்களைக் கேட்டால் எளிதாகப் பெயர்களைக் கூறிவிடுகின்றனர். இவர்கள் பிரபலங்களாக இருப்பது மட்டுமின்றி, பெயர்கள் எளிதாக இருப்பதும் இதற்குக் காரணமாக இருக்கிறது.
அ.தி.மு.க., வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வனின் பெயரை, அ.தி.மு.க.,வினர் பலர் கூட 'லோகேஷ்' என்று மட்டும் கூறுகின்றனர்; முழுமையாக கூறுவதில்லை. இவரது தந்தை அவிநாசி எம்.எல்.ஏ.,வான தனபால் பெயரை உடனடியாகக் கூறத் தெரிந்த வாக்காளர்களுக்கு 'லோகேஷ் தமிழ்ச்செல்வன்' பெயர் இன்னும் பரிச்சயமாகவில்லை. இன்னும் சிலர் 'தனபாலோட பையன்தான் நிக்கிறாரு' என்கின்றனர்.
திருப்பூர் தொகுதியில், இதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் என்றால் சுப்பராயனின் பெயரை வாக்காளர்கள் எளிதாகச் சொல்கின்றனர். தேர்தல் களம் பல கண்டவர்; இரு முறை எம்.எல்.ஏ., - இரு முறை எம்.பி., என்பது இதற்கு ஒரு காரணம்.
பொள்ளாச்சியில், பிரதானக்கட்சிகளில் களம் காணும் வேட்பாளர்கள் புதுமுகங்கள் என்பதால், வாக்காளர்களிடம் இவர்களது பெயர்கள் பரிச்சயமாகவில்லை.
சின்னமே பிரதானம்
வேட்பாளர்களை மையப்படுத்தாமல், தாமரை - உதயசூரியன் - இரட்டை இலை என்று கட்சிகளை மையமாகக் கொண்டு அவற்றின் சின்னங்களுக்கு வாக்காளர்கள் பெரும்பாலானோர் ஓட்டளிக்கின்றனர்.
''எல்லா வேட்பாளரோட பேரையும் தெரிஞ்சிக்க விரும்பறதில்லைங்க... நாங்க எந்தக்கட்சிக்கு போடுறமோ அந்தக்கட்சி வேட்பாளரோட பேரை மட்டும் நல்லா தெரிஞ்சு வச்சிருக்கிறோம். வேட்பாளர் பேரு சின்னதா, எளிதா உச்சரிக்கிற மாதிரி இருந்தா ஞாபகம் வச்சிக்கிறோம். எம்.பி.,யா ஜெயிச்சாலும், அவங்க மீண்டும் தொகுதிக்குள்ள எட்டிப்பார்ப்பாங்கங்கறது என்ன உத்தரவாதம்?'' என்று யதார்த்தத்தை வாக்காளர்கள் பலரும் போட்டு உடைக்கின்றனர்.
சொல்லப்போனால், வேட்பாளர்களின் நற்செயல்கள்தான், அவர்களைப் பிரபலப்படுத்தும்; வெற்றி பெறவும் வைக்கும்.
'பேரைச் சொன்னா அதிருதுல்ல...' என்ற 'பஞ்ச்' வசனம் பிரபலம். 'பேரைச் சொன்னா' வாக்காளர் முகத்தில் ஒரு புன்னகை பூத்தால், அதுதான் வேட்பாளரின் சிறப்புக்கு அடையாளம்!

