/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அன்னுாரில் மைதானமாக மாறிய குளங்கள் நிலத்தடி நீர்மட்டம் கடும் சரிவு
/
அன்னுாரில் மைதானமாக மாறிய குளங்கள் நிலத்தடி நீர்மட்டம் கடும் சரிவு
அன்னுாரில் மைதானமாக மாறிய குளங்கள் நிலத்தடி நீர்மட்டம் கடும் சரிவு
அன்னுாரில் மைதானமாக மாறிய குளங்கள் நிலத்தடி நீர்மட்டம் கடும் சரிவு
ADDED : மார் 24, 2024 11:51 PM

அன்னுார்:அன்னுார் வட்டாரத்தில் 80 சதவீதம் குளங்களில் ஒரு சொட்டு நீர் கூட இல்லாமல் வறண்டு போய் மைதானம் போல் உள்ளன.
அன்னுார் வட்டாரத்தில் அன்னுார் மற்றும் காட்டம்பட்டியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளங்கள் உள்ளன. இதைத் தவிர 100 ஏக்கர் பரப்பளவுக்கு குறைவான கஞ்சப்பள்ளி, கெம்பநாயக்கன்பாளையம், எல்லப்பாளையம் உள்ளிட்ட 21 ஊராட்சிகளில் 189 குளங்கள் உள்ளன.
கடந்த மூன்று மாதங்களில் ஒரு முறை கூட அன்னுார் வட்டாரத்தில் மழை பெய்யவில்லை. கடந்த ஆண்டு, அக்டோபர் மாதத்தில் மழை பெய்தது மற்றும் அத்திக்கடவு சோதனை ஓட்டம் காரணமாக அன்னுார், கஞ்சப்பள்ளி, எல்லப்பாளையம் மற்றும் கெம்பநாயக்கன் பாளையம் குளங்களில் ஓரளவு நீர் சேர்ந்தது. மீதி 80 சதவீத குளங்களில் ஒரு சொட்டு நீர் கூட இல்லை. விளையாட்டு மைதானம் போல் காட்சி அளிக்கிறது. இதேபோல் ஊராட்சிகள் சார்பில் கட்டப்பட்ட தடுப்பணைகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் காணப்படுகின்றன.
இதுகுறித்து புதுப்பாளையம் மக்கள் கூறுகையில்,' புதுப்பாளையத்தில் உள்ள 10 ஏக்கர் குளத்தில், ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை. மூன்று முறை சோதனை ஓட்டத்தில் தண்ணீர் விடப்பட்டது. அந்த தண்ணீரும் காய்ந்து ஆவி ஆகிவிட்டது. அல்லப்பாளையம், மத்திரெட்டிபாளையம், பசூர், ஆம்போதி என இப்பகுதியில் உள்ள குளம், குட்டைகள் தண்ணீருக்காக ஏங்குகின்றன. இந்த பருவத்தில் பயிரிடப்பட்ட பயிர்கள் கிணற்று நீர் உள்ளவர்களுக்கு மட்டும் கை கொடுக்கிறது.
வானம் பார்த்து, பருத்தி, நிலக்கடலை, சோளம் பயிரிட்ட விவசாயிகள் கருகிய பயிர்களை வேதனையுடன் வேடிக்கை பார்க்க வேண்டி உள்ளது. நிலத்தடி நீர்மட்டமும் கடுமையாக சரிந்து விட்டது. வழக்கமாக மூன்று மணி நேரம் ஓடும் போர்வெல் தற்போது ஐந்து மணி நேரம் ஓட்டினால் மட்டுமே சிறிதளவு நீர் பயிர்களுக்கு பாய்ச்ச முடிகிறது.
விரைவில் மழை பெய்யாவிட்டால், அன்னுார் வட்டாரத்தில் விவசாயத்துக்கு, கால்நடைக்கு, குடிநீருக்கு என எதற்கும் தண்ணீர் கிடைப்பது அரிதாகிவிடும்,' என்றனர்.

