/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தபால் துறையின் ஊக்கத்தொகை திட்டம் விண்ணப்பிக்க அழைப்பு
/
தபால் துறையின் ஊக்கத்தொகை திட்டம் விண்ணப்பிக்க அழைப்பு
தபால் துறையின் ஊக்கத்தொகை திட்டம் விண்ணப்பிக்க அழைப்பு
தபால் துறையின் ஊக்கத்தொகை திட்டம் விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஆக 15, 2024 11:39 PM
பொள்ளாச்சி : தபால் தலை சேகரிப்பு வாயிலாக, ஊக்கத்தொகை பெறுவதற்கு, 6 முதல் 9ம் வகுப்பு பள்ளி மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி தபால் கோட்டக் கண்காணிப்பாளர் சாந்தினிபேகம் அறிக்கை:
பள்ளி மாணவ, மாணவியர் மத்தியில், தபால் தலை சேகரிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, தபால் துறை வாயிலாக 'தீன் தயாள் ஸ்பர்ஷ் யோஜனா' ஊக்கத் தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கு, தபால் தலை சேகரிப்பு கணக்கு வைத்துள்ள, 6 முதல் 9ம் வகுப்பு மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம்.
தவிர, விண்ணப்பிக்கும் மாணவ, மாணவியர் கடந்தாண்டு நடந்த தேர்வில், 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்கவேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பின், 55 சதவீத மதிப்பெண்கள் போதுமானது.
இந்த திட்டத்திற்காக, விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு, முதற்கட்டமாக வினாடி-வினா, எழுத்துத் தேர்வு, செப்., 29ம் தேதி நடத்தப்படும். இதில் வெற்றி பெறுவோர், தபால் தலை தொடர்பான ஏதேனும் ஒரு தலைப்பின் கீழ் கட்டுரை சமர்ப்பிக்க வேண்டும்.
வெற்றி பெறும் மாணவ, மாணவியருக்கு மாதம், 500 ரூபாய் வீதம், ஆண்டுக்கு, 6 ஆயிரம் ரூபாய் அவர்களது சேமிப்பு கணக்கில் சேர்க்கப்படும். இந்த தொகை, 9ம் வகுப்பு முடியும் வரை, ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும். அதன்படி, இந்த ஆண்டும் ஊக்கத்தொகை திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். எனவே, தபால் தலை சேகரிப்பு கணக்கு துவக்க விருப்பம் உள்ள பள்ளி நிர்வாகத்தினர், மாணவ, மாணவியர், பொள்ளாச்சி தலைமை தபால் அலுவலகத்தைச் சேர்ந்த கார்த்திக், 90809 17319 என்ற மொபைல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, 'தபால் கண்காணிப்பாளர், பொள்ளாச்சி தபால் கோட்டம், பொள்ளாச்சி - 642 001,' என்ற முகவரிக்கு, செப்., 1ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.