/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மிளகாய் விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி
/
மிளகாய் விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஏப் 23, 2024 10:10 PM
உடுமலை : வரத்து குறைவால் பச்சை மிளகாய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மிளகாய், 60- 65 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வீடுகளில் சமையலில் முக்கிய பங்கு வகிக்கும் காய்கறிகளில் ஒன்று பச்சை மிளகாய். இதன் விலை உயர்ந்துள்ளது.
கோடை வெயிலின் தீவிர தாக்கம் காரணமாக, உடுமலை நகராட்சி சந்தைக்கு பச்சை மிளகாய் வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வரத்து குறைந்துள்ளது.
வியாபாரிகள் கூறுகையில்,'உள்ளூர் பச்சை மிளகாய் வரத்து மிகவும் குறைந்து விட்டது. தாளவாடி, ஒட்டன்சத்திரத்தில் இருந்து வாங்கி வரும் மிளகாயே விற்பனைக்கு கைகொடுக்கிறது. வரும் நாட்களில் வெயில் அதிகமாகும் போது, இன்னமும் விலை உயரும்,' என்றனர்.
ஒரு எலுமிச்சை 8 ரூபாய்
வெயில் கொளுத்துவதால், எலுமிச்சை பழம் விலை இரு வாரங்களாக தொடர்ந்து உச்சத்திலேயே உள்ளது. கிலோ, 130 முதல், 150 ரூபாய் என்ற நிலையிலேயே தொடர்கிறது. விற்பனையை எதிர்பார்த்து பிஞ்சு, காய், சிறிய, அடிபட்ட பழம் உட்பட எல்லாத்தையும் விற்பனைக்கு கொண்டு வந்து விடுகின்றனர்.
எலுமிச்சைக்கு பெயர் போன, திருநெல்வேலி, புளியங்காட்டில் இருந்து எலுமிச்சைகளை வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வந்தும், விலை குறையவில்லை. கிலோ, 150 ரூபாய் என்பதால், சில்லறை விலை ஒரு பழம், எட்டு ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

