/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை: அணைகளின் நீர்மட்டம் உயர்வு
/
நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை: அணைகளின் நீர்மட்டம் உயர்வு
நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை: அணைகளின் நீர்மட்டம் உயர்வு
நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை: அணைகளின் நீர்மட்டம் உயர்வு
ADDED : ஜூன் 12, 2024 12:14 AM
பொள்ளாச்சி;பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடந்தாண்டு பருவமழை கை கொடுக்காததால், அணைகளுக்கு நீர்வரத்து இல்லாத சூழல் நிலவியது.பி.ஏ.பி., திட்டத்தில், பாசனத்துக்கு தண்ணீர் வழங்க முடியாத நிலையில், நிலை பயிர்களை மட்டும் காப்பாற்ற குறைந்த நாட்களுக்கு மட்டும் நீர் வினியோகிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த மாதம் ஒரு வாரம் பெய்த தொடர் மழையால் வறட்சியின் பிடியில் இருந்து பொள்ளாச்சி மீண்டது. கோடை மழையை பயன்படுத்தி விவசாயிகள் உழவு செய்து, நிலத்தை சாகுபடி செய்ய தயார் செய்தனர்.கடந்த சில நாட்களாக அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவமழை பெய்வதால், நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
கடந்த, 9ம் தேதி சோலையாறு அணை நீர்மட்டம், 46.05 அடியாக இருந்தது. கடந்த, இரண்டு நாட்களில் ஐந்து அடி நீர்மட்டம் உயர்ந்து, 51.94 அடியாக உயர்ந்துள்ளது. வினாடிக்கு, 731.80 கனஅடி நீர் வரத்து உள்ளது. வினாடிக்கு, 20 கன அடிநீர் வெளியேற்றப்படுகிறது.
பரம்பிக்குளம் அணை நீர்மட்டம், 12.65 அடியாக உள்ளது. வினாடிக்கு, 560 கனஅடி நீர் வரத்து உள்ளதுடன், வினாடிக்கு, 107 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
ஆழியாறு அணை நீர்மட்டம், 79.40 அடியாகவும்; திருமூர்த்தி அணை, 30.92 அடியாகவும் உயர்ந்துள்ளது. அமராவதி அணை நீர்மட்டம், 49.81 அடியாக உளளது.
நேற்று காலை, 8:00 மணி வரை, வால்பாறை - 9 மி.மீ., மேல்நீராறு - 27, கீழ்நீராறு - 13, வேட்டைக்காரன்புதுார் - 4, மணக்கடவு - 9, பொள்ளாச்சி - 1 மி.மீ., என மழையளவு பதிவானது.
விவசாயிகள் கூறியதாவது: கடந்தாண்டு பருவமழை பொய்த்ததால், சாகுபடி செய்ய முடியாமல் தென்னை உள்ளிட்ட நிலை பயிர்களை காப்பாற்றவே போராட வேண்டிய சூழல் ஏற்பட்டது. காய்ந்து போன மரங்களை வெட்டி, கிடைத்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.
கோடை மழை கை கொடுத்தது போன்று, தென்மேற்கு பருவமழையும் கை கொடுத்து அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து முழு கொள்ளளவை எட்ட வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
நடப்பாண்டாவது தடையின்றி பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.