/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அமராவதி ஆற்றை ஆக்கிரமிக்கும் ஆகாயத்தாமரை பாதிப்புகள் அதிகரித்தும் அலட்சியம்
/
அமராவதி ஆற்றை ஆக்கிரமிக்கும் ஆகாயத்தாமரை பாதிப்புகள் அதிகரித்தும் அலட்சியம்
அமராவதி ஆற்றை ஆக்கிரமிக்கும் ஆகாயத்தாமரை பாதிப்புகள் அதிகரித்தும் அலட்சியம்
அமராவதி ஆற்றை ஆக்கிரமிக்கும் ஆகாயத்தாமரை பாதிப்புகள் அதிகரித்தும் அலட்சியம்
ADDED : மே 29, 2024 11:46 PM

உடுமலை : அமராவதி ஆற்றின் நீர்தேக்க பகுதிகள் முழுவதும் ஆக்கிரமித்து வரும், ஆகாயத்தாமரை செடிகளை சிறப்பு திட்டத்தின் கீழ் அகற்றாவிட்டால், பல்வேறு பாதிப்புகள் தொடர்கதையாகி விடும்.
உடுமலை அருகே அமராவதி அணையில் துவங்கி, கரூரில், காவிரியில் கலக்கும் அமராவதி ஆறு, இரு மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக உள்ளது.
பல நுாற்றாண்டுகளுக்கு முன்பே, ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டி, ஆற்று நீரை பயன்படுத்தி, நெல் உட்பட விவசாய சாகுபடி செய்து வந்துள்ளனர்.
பழமையான பாசன முறை உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கிய அமராவதி ஆறு, தற்போது பல இடங்களில் மாசுபட்டு, குடிநீருக்கு கூட பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி வருகிறது.
கழிவு நீர் கலப்பு
அமராவதி ஆற்றின் கரையோரத்தில் இருக்கும், பல்வேறு குடியிருப்புகளில் இருந்து கழிவு நீர் நேரடியாக ஆற்றில் கலக்கிறது. நீண்ட காலமாக கழிவு நீர் கலப்பது, நீரை அதிகளவு மாசுபடுத்துகிறது.
மேலும், ஆற்றின் கரையில், குப்பைகளை குவித்து வைப்பதுடன், பிளாஸ்டிக் கழிவுகளையும் நேரடியாக ஆற்றில் கொட்டுகின்றனர். இந்த அவலம் பல இடங்களில், தொடர்கதையாக உள்ளது.
சிறப்பு திட்டம் தேவை
அமராவதி ஆற்றில் நேரடியாக கழிவு நீர் கலப்பதால், ஆகாயத்தாமரை செடிகள் பல இடங்களில் செழித்து வளர்ந்துள்ளது. குறிப்பாக, ஆற்றில் நீரோட்டம் இல்லாத காலங்களில், தண்ணீர் தேங்கும் பகுதிகள் முழுவதும் இச்செடிகள் ஆக்கிரமித்துள்ளது.
குறிப்பாக, கொழுமம், மடத்துக்குளம், கடத்துார் உள்ளிட்ட இடங்களில், ஆற்றில் நீரோட்டம் இருப்பதே தெரியாத அளவுக்கு, ஆகாயத்தாமரை செடிகள் காணப்படுகிறது.
இச்செடிகளை அகற்ற, பொதுப்பணித்துறை மற்றும் குடிநீர் தேவைக்காக ஆற்று நீரை பெறும் உள்ளாட்சி அமைப்புகளும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இச்செடிகளால், நீர் வாழ் உயிரினங்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது. சூரிய ஒளி நீருக்குள் ஊடுருவது தடுக்கப்படுகிறது.
கோடை காலத்தில், ஆகாயதாமரை செடிகளின் இலை வழியாக நீராவிப்போக்கு அதிகமாக இருக்கும் என்பதால், நீர்மட்டம் வெகுவாக குறைந்து விடும். கொசு உற்பத்தியும் அதிகரித்து விடும். மீன் பிடி தொழிலும் பாதிக்கிறது.
இவ்வாறு, அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அனைத்து தடுப்பணை மற்றும் நீர் தேக்க பகுதிகளிலும், ஆகாயதாமரை செடிகளை அப்புறப்படுத்த சிறப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
தொடர் கண்காணிப்பு செய்து, ஆற்று நீர் மாசுபடுவதை தடுக்க திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.