/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு நிதி சார்ந்த பயிற்சி அளிக்க திட்டம்' பேக்கேஜிங் கண்காட்சியில் தகவல்
/
'எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு நிதி சார்ந்த பயிற்சி அளிக்க திட்டம்' பேக்கேஜிங் கண்காட்சியில் தகவல்
'எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு நிதி சார்ந்த பயிற்சி அளிக்க திட்டம்' பேக்கேஜிங் கண்காட்சியில் தகவல்
'எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு நிதி சார்ந்த பயிற்சி அளிக்க திட்டம்' பேக்கேஜிங் கண்காட்சியில் தகவல்
ADDED : செப் 11, 2024 01:15 AM

கோவை:கொடிசியா வர்த்தக வளாகத்தில் பிரிண்டிங், பேப்பர், பேக்கேஜிங், பல்வேறு மூலப்பொருட்களை மையமாக கொண்டு, ' 3பி' மற்றும் 'ரா -மேட்' கண்காட்சி நேற்று துவங்கியது.
இக்கண்காட்சி, இன்றும், நாளையும் தொடர்ந்து நடக்கிறது. பேப்பர், பிரிண்டிங், பேக்கேஜிங் இயந்திர உற்பத்தியாளர்கள், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், காப்பர், டிசைனிங், லேசர், டிசைனிங் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து, அரங்குகள் அமைத்துள்ளனர்.
நவீன தொழில்நுட்பத்தில் அமைந்துள்ள, டிஸ்யூ பேப்பர் தயாரிக்கும் இயந்திரம், அனைத்து வித பவுடர் பேக்கிங் இயந்திரம், சில்வர் பவுச் தயாரிப்பு இயந்திரம், பேப்பர் கப் இயந்திரம், டை பன்சிங் மிஷின், தெர்மல் லேமினேட்டர், பேப்பர் டிரில்லிங் மிஷின் உள்ளிட்ட பல்வேறு இயந்திரங்களை ஆர்வமுடன் பார்வையாளர்கள் பார்வையிட்டு, விளக்கம் பெற்றனர்.
கண்காட்சியை துவக்கி வைத்து, டில்லி தேசிய சிறு தொழில் கழக தலைமை பொது மேலாளர் ரவிக்குமார் பேசியதாவது:
தேசிய சிறு தொழில் கழகம் எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு, மூலப்பொருட்களை உற்பத்தியாளர்களிடம் இருந்து பெற்று தருவதிலும், அதுசார்ந்த வழிகாட்டுதல்களை வழங்குவதிலும் உதவி வருகிறது.
லுாதியானா, ஜலந்தர், ஜெய்ப்பூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் மூலப்பொருட்கள் சார்ந்த உதவிகளை, அதிகம் பெறுகின்றனர்.
எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள், குழுவாக மூலப்பொருட்களை கொள்முதல் செய்தால், அதிக பலன் பெற முடியும். கொடிசியா போன்ற நிறுவனங்களின் ஒத்துழைப்பு, இதில் மிக அவசியம்.
பெரிய உற்பத்தி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் வாயிலாக, மிகவும் குறைந்த விலையில், கொள்முதல் செய்வதற்கு வழிவகை செய்யப்படுகிறது.
தேசிய சிறு தொழில் கழகம் எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு, விற்பனை அதிகரிக்கும் வகையில் பிரத்யேக செயலி உருவாக்கப்பட்டு வருகிறது. எம்.எஸ்.எம்.இ., தொழில்நிறுவனங்களுக்கு, நிதிசார்ந்த ஒழுங்கு முறை பயிற்சி அவசியம். பல நிறுவனங்கள், சிபில் ஸ்கோர் குறைந்து பாதிக்கப்படுகின்றன.
தொடர்ந்து வங்கிகளை அணுகுவதில் சிரமங்கள் எழுந்துள்ளன. இதற்கான, பயிற்சிகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்.
தேசிய சிறு தொழில் கழகத்தின் கீழ், பல்வேறு நிதி, கடன் உதவிகள் வழங்கப்படுகின்றன. தொழில்நிறுவனங்கள் பயன்பெறலாம். மத்திய சிறு குறு தொழில் அமைச்சகம் சமீபத்தில், 'டீம்' என்ற ஆன்லைன் போர்டல் துவங்கியுள்ளது. இதில், இணைந்து பயன்பெறலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
துவக்கவிழா நிகழ்வில், கொடிசியா தலைவர் கார்த்திகேயன், சக நிர்வாகிகள் சரவணகுமார், ஜெகதீஸ், சுரேஷ்குமார், ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் பங்கேற்றன்.