/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்சூரன்ஸ் செய்தும் இழப்பு; விவசாயிகள் வாட்டம்
/
இன்சூரன்ஸ் செய்தும் இழப்பு; விவசாயிகள் வாட்டம்
ADDED : மே 12, 2024 11:17 PM

பெ.நா.பாளையம்;ஆண்டுதோறும் கோடை மழை காலத்தில், வாழை விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட, போதுமான இன்சூரன்ஸ் தொகையை வழங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள செல்வபுரம் கட்டாஞ்சி மலை அடிவாரத்தில், பலத்த காற்றுடன் பெய்த மழையால், 2000க்கும் மேற்பட்ட வாழைகள் முறிந்து, சேதம் அடைந்தன. பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக விட்டு,விட்டு மழை பெய்து வருகிறது.
சூறாவளி காற்றுடன் மழை, மாலை நேரங்களில் பெய்து வருவதால், ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்து விழுந்து, மின் கம்பங்கள் சேதம் அடைகின்றன. இவற்றை சரி செய்யும் பணியில், மின்வாரியம் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
பலத்த காற்று வீசியதில் செல்வபுரத்தில், கந்தசாமிக்கு சொந்தமான தோட்டத்தில், 2000 வாழைகள் முறிந்து, கீழே விழுந்தன. சம்பவ இடத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேணுகோபால், துணைத்தலைவர் வேலுச்சாமி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
இது குறித்து, தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேணுகோபால் கூறுகையில், கோவை வடக்குப்பகுதி, மேற்கு தொடர்ச்சி மலையோர கிராமங்களில் தண்ணீர் வசதி ஓரளவு இருப்பதால், பெரும்பாலான விவசாயிகள் தென்னை, வாழை பயிரிடுகின்றனர். குறிப்பாக, இப்பகுதியில் வாழை பயிரிடும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகம்.
வாழை நஷ்டத்தில் இருந்து தப்ப, விவசாயிகள், இன்சூரன்ஸ் செய்கின்றனர். ஆனால், இது இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு மட்டுமே லாபமாக உள்ளது. விவசாயிகளுக்கு இல்லை.
இது போன்ற கோடை மழை காலத்தில், குறிப்பிட்ட தோட்டத்தில் மட்டும் வாழைகள் முறிந்து விழுந்தால் போதாது, அந்த ஊரில் உள்ள அனைத்து தோட்டங்களிலும் உள்ள வாழைகள் சேதம் அடைந்தால் மட்டுமே இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படும் என, கையை விரிக்கின்றனர்.
எனவே, விவசாய பயிர்களுக்கான இன்சூரன்ஸ், தனிநபர் வாகன இன்சூரன்ஸ் போல, குறிப்பிட்ட விவசாயிக்கு வாழையில் நஷ்டம் ஏற்பட்டால், அவருக்கும் இன்சூரன்ஸ் வாயிலாக பணத்தை கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இத்திட்டத்தை அமுல்படுத்தும் வரை, வாழை விவசாயிகளுக்கு உற்பத்தி செலவுகளை அளிக்க, அரசு முன்வர வேண்டும். அதாவது, ஒரு வாழைக்கு, 100 முதல், 200 ரூபாய் வரை உற்பத்தி செலவாகிறது. அதை வழங்க அரசு முன்வர வேண்டும்.
ஆனால், தற்போது, முறிந்து கிடக்கும் வாழை மரத்தை தோண்டி, அகற்ற, குறைந்தபட்சம், 50 ரூபாய் செலவாகிறது. ஆனால், அரசு ஒரு வாழைக்கு நஷ்ட ஈடாக அதிகபட்சம் ஐந்து ரூபாய் மட்டும் வழங்குகிறது என்றார்.