/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கேரளாவில் 'நிபா' வைரஸ் பாதிப்பு: எல்லையில் கண்காணிப்பு தீவிரம்
/
கேரளாவில் 'நிபா' வைரஸ் பாதிப்பு: எல்லையில் கண்காணிப்பு தீவிரம்
கேரளாவில் 'நிபா' வைரஸ் பாதிப்பு: எல்லையில் கண்காணிப்பு தீவிரம்
கேரளாவில் 'நிபா' வைரஸ் பாதிப்பு: எல்லையில் கண்காணிப்பு தீவிரம்
ADDED : ஜூலை 24, 2024 12:39 AM

பொள்ளாச்சி;கேரளா மாநிலத்தில், 'நிபா' வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதில், 14வயது சிறுவன் உயிர் இழந்த நிலையில், பலருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழக - கேரள எல்லை பகுதியில் கண்காணிப்பு பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
பொள்ளாச்சி அருகே, தமிழக - கேரள எல்லையில் உள்ள கோபாலபுரம் சோதனைச்சாவடியில், கண்காணிப்பு பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை சோதனைக்கு பின் அனுப்புகின்றனர்.
இதேபோன்று, மீனாட்சிபுரம் பகுதியில் வட்டார மருத்துவ அலுவலர் பாரதி கண்ணன் தலைமையில் 'நிபா' வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. கேரள மாநிலத்தில் இருந்து வரும் பயணியர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
கேரளாவில் இருந்து தமிழகம் வரும் பயணியர், தமிழகத்திற்குள் நுழைவதற்கு முன்னரே, எல்லையில் உரிய மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு அனுப்பப்படுகின்றனர்.
கேரள பயணியரிடம், காய்ச்சல் பாதிப்பு இருக்கிறதா என பரிசோதிக்கப்படுகிறது. காய்ச்சல் இருந்தால், உரிய மருத்துவ சிகிச்சை பெற, மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர்.
அந்தந்த வட்டார பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில், காய்ச்சல் அறிகுறிகளுடன் உள்ளனரா என ஆய்வு செய்யப்படுகிறது. காய்ச்சல் பாதிப்பு இருந்தால், பொதுமக்கள் உடனே மருத்துவமனையை அணுக வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

