/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குப்பை அகற்றுவதில் முறைகேடு: கவுன்சிலர்கள் ஆவேசம்
/
குப்பை அகற்றுவதில் முறைகேடு: கவுன்சிலர்கள் ஆவேசம்
ADDED : ஜூலை 05, 2024 02:06 AM

உடுமலை:உடுமலை நகராட்சியில், குப்பை அகற்றுவதில் மிகப்பெரிய முறைகேடு நடந்து வருவதாக, கவுன்சிலர்கள் அனைவரும் ஆக்ரோஷமாக பேசினர்.
உடுமலை நகராட்சி கூட்டம், தலைவர் மத்தீன் தலைமையில் நேற்று நடந்தது.
இதில், கவுன்சிலர்கள் பேசியதாவது :
நகர பகுதிகளில் குப்பை முறையாக அகற்றப்படாததால், பல்வேறு பகுதிகளில் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுத்தி வருகிறது. மேலும், குப்பைக்கு தீ வைத்து எரிக்கப்படுவதால், மக்களுக்கு ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகிறது.
கமிஷனர் வீட்டிற்கு முன்பே, குப்பை, கழிவு கொட்டப்பட்டு தீ வைக்கப்படுகிறது. தற்போதும், எரிந்து வருகிறது. சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்று பார்த்துக்கொள்ளலாம்.
ஒவ்வொரு மண்டலத்திற்கும், 40 முதல், 50 துாய்மைப்பணியாளர்கள் உள்ளதாக, அதிகாரிகள் கணக்கு காட்டுகின்றனர். ஆனால், 10 பேர் கூட பணியில் இருப்பதில்லை. மிகப்பெரிய முறைகேடு நடக்கிறது.
'மாஸ் கிளீனிங்' என கூறி, அதிகாரிகள் இல்லாமல், குறைந்தளவு பணியாளர்களைக்கொண்டு, பெயரளவிற்கு நடக்கிறது.
மக்களிடம், நகராட்சி நிர்வாகத்திற்கும், அரசிற்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது. ஒரு பகுதியில் சேகரித்து, மறு பகுதியில் கொட்டப்படுகிறது. அருகிலுள்ள ஊராட்சிகளிலிருந்து, நகராட்சியில் குப்பை, கழிவுகள் கொட்டப்படுவதாக அதிகாரிகள் சமாளிக்கின்றனர்.
ஆனால், நகராட்சி வாகனம், ஊராட்சி பகுதியில், நீர் நிலையை அழிக்கும் வகையில் குப்பை கொட்டி வருகிறது; போட்டோ ஆதாரம் உள்ளது.
தனியார் நிறுவனம், தினமும் நிர்ணயிக்கப்பட்ட அளவு குப்பை வழங்குவதாக கணக்கு மட்டும் உள்ளது. ஆனால், குப்பை அனைத்தும் பொது இடங்களில் கொட்டப்பட்டு எரிக்கப்படுகிறது.
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், மூன்று நுண் உரக்குடில்கள் உள்ளன. அவையும் முறையாக செயல்படுவதில்லை; உரம் தயாரிக்கப்படுவதில்லை.
கொசு மருந்து மூன்று மாதமாக அடிக்கவில்லை; மழை நீர் வடிகால்கள் துார்வாராததால், கழிவு நீர் தேங்கி கொசு உற்பத்தி அதிகமாக உள்ளது. தெரு விளக்குகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை.
பாதாள சாக்கடை திட்டத்திலும் ஏராளமான குளறுபடிகள் நடக்கிறது, ஏற்கனவே பணம் செலுத்தியவர்களுக்கு இணைப்பு வழங்கவில்லை. மீண்டும் டெபாசிட், இணைப்பு கட்டணம் செலுத்த வலியுறுத்தப்படுகிறது.
பஸ் ஸ்டாண்டில், ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால், பயணியர் நடக்க கூட முடிவதில்லை. அண்ணா பூங்கா, எஸ்.என்.ஆர்., நகர் பூங்கா என பல்வேறு பூங்காக்களில் நிதி ஒதுக்கியும், ஆண்டுக்கணக்கில் பணி நடந்து வருகிறது.
மது அருந்தும் மையமாகவும், சமூக விரோத செயல்கள் நடக்கும் மையமாக பூங்காக்கள் மாறி வருகிறது. திட்டப்பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும்.
மதுக்கடை அகற்றுவது என்னாச்சு
உடுமலை பசுபதி வீதியில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கி, கடைகள், குடியிருப்புகளுக்கு மத்தியில் டாஸ்மாக் மதுக்கடை அமைந்துள்ளது, 10 அடி அகலமுள்ள ரோட்டில், காலையிலேயே, அரை, குறை ஆடையுடன், போதை ஆசாமிகள் சுற்றி வருகின்றனர்.
நடக்க முடியாத அளவிற்கு கூட்டம் காணப்படுகிறது. மகளிர் சுய உதவி குழு பெண்கள், கடைகளுக்கு வரும் பெண்கள், பள்ளி மாணவர்கள் நடக்க முடியாத அளவிற்கு உள்ளது.
கடையை மாற்ற தீர்மானம் நிறைவேற்றி, வியாபாரிகள் சங்கம் போராட்டம் நடத்தியும், ஏன் மாற்றவில்லை. மீண்டும், மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பி, மதுக்கடையை புற நகர பகுதிக்கு மாற்ற வேண்டும்.
இவ்வாறு, கவுன்சிலர்கள் பேசினர்.
தலைவர்: அனைத்து கவுன்சிலர்களும் குப்பை அகற்றும் பிரச்னையை எழுப்பும் நிலையில், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவும், நிதி ஒதுக்கி வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.இக்கூட்டத்தில், மொத்தம், 75 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.