/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜல் ஜீவன் சக்தி திட்ட இயக்குனர் ஆய்வு
/
ஜல் ஜீவன் சக்தி திட்ட இயக்குனர் ஆய்வு
ADDED : மார் 12, 2025 11:16 PM

கருமத்தம்பட்டி; கணியூர் ஊராட்சியில் மழை நீர் சேகரிப்பு மற்றும் குடிநீர் மேலாண்மை குறித்து மத்திய அரசின் ஜல்ஜீவன் சக்தி திட்ட இயக்குனர் ராஜலட்சுமி தேவராஜ் ஆய்வு செய்தார்.
மத்திய அரசின் ஜல் ஜீவன் சக்தி திட்ட இயக்குனர் ராஜலட்சுமி தேவராஜ் மற்றும் கூடுதல் கலெக்டர் சங்கேத் பல்வந்த் வாகே ஆகியோர் கணியூர் ஊராட்சியில் நடந்த மகிளா சபை கூட்டத்தில் பங்கேற்று குடிநீர் சிக்கனம், மழை நீர் சேகரிப்பு, குடிநீர் மேலாண்மை குறித்து பேசினர்.
முன்னதாக, மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகள், திடக்கழிவு மேலாண்மை வாயிலாக நெகிழிகளை கொண்டு உருவாக்கப்பட்ட அறையை பார்வையிட்டனர்.
மாரி வனத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தனர். கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து பயன்படுத்தும் திட்டம் குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து, திட்ட இயக்குனர் ராஜலட்சுமி கூறுகையில், கணியூர் ஊராட்சி குடிநீர் மேலாண்மை, மரங்கள் வளர்ப்பு, மழை நீர் திட்டங்களை செயல்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.
குடிநீர் மேலாண்மையில் கோவை மாவட்டம் சிறப்பாக செயல்படுகிறது. ஜல் ஜீவன் திட்டத்தின் வாயிலாக அனைவருக்கும் குடிநீர் உறுதி செய்யப்பட்டுள்ளது. நீர் நிலைகளை பராமரிக்கவும், மழை நீர் சேகரிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது, என்றார்.
பி.டி.ஓ., முத்துராஜூ, மாவட்ட செயற்பொறியாளர் முனி ராஜ், முன்னாள் தலைவர் வேலுசாமி, செயலர் ஜெகதீசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.