/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'மக்களின் நியாயத்தை உறுதிப்படுத்த நீதிமன்றம் செயல்படுகிறது' சட்ட விழிப்புணர்வு முகாமில் நீதிபதி பேச்சு
/
'மக்களின் நியாயத்தை உறுதிப்படுத்த நீதிமன்றம் செயல்படுகிறது' சட்ட விழிப்புணர்வு முகாமில் நீதிபதி பேச்சு
'மக்களின் நியாயத்தை உறுதிப்படுத்த நீதிமன்றம் செயல்படுகிறது' சட்ட விழிப்புணர்வு முகாமில் நீதிபதி பேச்சு
'மக்களின் நியாயத்தை உறுதிப்படுத்த நீதிமன்றம் செயல்படுகிறது' சட்ட விழிப்புணர்வு முகாமில் நீதிபதி பேச்சு
ADDED : மே 27, 2024 11:17 PM
அன்னுார்:மக்களின் நியாயத்தை உறுதிப்படுத்த நீதிமன்றம் செயல்படுகிறது' என்று விழிப்புணர்வு முகாமில் நீதிபதி பேசினார்.
அன்னுார் வட்ட சட்ட பணிக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் அன்னுார் அருகே குப்பனுாரில் நடைபெற்றது. இதில் அன்னுார் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிபதி மோனிகா கலந்து கொண்டு பேசியதாவது:-
இடப்பிரச்னை, குடும்ப பிரச்னை, மனைவி, கணவன் இடையே தகராறு உள்ளிட்ட எந்த பிரச்னையாக இருந்தாலும் உடனடியாக வழக்கறிஞர்களை பார்க்க வேண்டும். இல்லை, உங்களுக்கு எப்படி பார்க்க வேண்டும் என்று தெரியவில்லை என்றால், நீதிமன்றம் சார்பாக அரசு வழக்கறிஞர்களை நியமிக்க நாங்கள் உதவி செய்வோம்.
இலவசமாக அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் உங்களுக்காக வாதிட்டு உங்கள் உரிமையை பெற்று தருவார்கள். நீதிமன்றத்தில் இருந்து வரும் ஆணைகளை கண்டு அஞ்சக்கூடாது. அவர்கள் என்ன கேட்கிறார்களோ, அதற்கு தகுந்த உங்களுடைய ஆவணங்களையோ, உங்களது பதில்களையோ சமர்ப்பிக்கவேண்டும்.
இதற்காக நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டுமா என்று அச்சப்படாதீர்கள். நீதிமன்றத்தில் நீங்கள் குற்றவாளி என்று தெரிவிக்க போவதில்லை. இது சம்பந்தமாக உங்களிடம் கேள்விகள் மட்டுமே கேட்கப்படுகின்றன. நீங்கள் அதற்காக வாதிட்டு பயப்படாமல் உங்கள் நியாயத்தை தெரிவித்து போராடலாம்.
நீதிமன்றத்தில் இருந்து தபால்கள் வாயிலாக கேள்விகள் கேட்கப்படும் பொழுது, அதற்கு உரிய பதில் அளிக்காமல், கண்டுகொள்ளாமல் இருந்தால் அது உங்களுக்கு பாதகமாகி விடும்.
போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிவானால், மறைந்து வாழாமல் நேரடியாக உங்களிடம் இருக்கும் நியாயத்தை சுட்டிக்காட்ட நீதிமன்றத்திற்கு வர வேண்டும். இதற்காக அச்சப்படக்கூடாது. நீதிமன்றம் நியாயத்தை காப்பாற்ற செயல்படுகிறது.
உங்கள் நியாயத்தை உறுதிப்படுத்த நீதிமன்றம் செயல்படுகிறது. இதற்காக மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நேரடியாக நீதிமன்றத்தில் பேசி, தனிப்பட்ட பிரச்னையாக இருந்தாலும் பேசி முடித்துக் கொள்ளலாம். மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின், பொதுமக்களிடம் குறை தீர்ப்பு மனு பெறப்பட்டது. மேலும், இதில் பங்கேற்றவர்களுக்கு, யார் இலவச சட்ட உதவி பெற தகுதியானவர்கள், சட்ட விழிப்புணர்வு அறிக்கை, எந்த பிரச்னைகளுக்கு இலவசமாக சட்ட உதவி பெறலாம், யாரை அணுகி எப்படி உதவி பெறலாம் என்ற துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.