/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இளைஞர்களால் உருவாகும் கலாமின் 'கனவு இந்தியா!'
/
இளைஞர்களால் உருவாகும் கலாமின் 'கனவு இந்தியா!'
ADDED : ஜூலை 26, 2024 11:29 PM
கண்களை மூடிக் காணும் கனவை, கண்களை திறந்து கொண்டும் காண முடியும் என்று புரிய வைத்தவர் அப்துல் கலாம். அவரது வல்லரசுக் கனவு நனவாகும் நாள் தொலைவில் இல்லை.
இந்தியாவின் வளர்ச்சியை, உள்நாட்டு மொத்த வர்த்தகத்தை உயர்த்துவதன் மூலம் சாதிக்க முடியும் என்று கருதினார் கலாம். அதற்கான முயற்சிகள்தான் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.
உள்ளூர் சந்தைகளை ஊக்குவிக்க வேண்டும். உற்பத்தி மற்றும் சேவை துறைகளின் வளர்ச்சி என்பது நிலையான வளர்ச்சியாக இருக்க வேண்டும். உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் நிதித்துறையில் தொழில்நுட்ப மேம்பாடுகளை கொண்டுவர வேண்டும்.
இந்தியாவில் தொழில்நுட்ப மேம்பாடுகளை கொண்டுவர நிலையான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி, தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்த நாடாக உலக நாடுகள் பார்க்க வேண்டும் என்பது தான் அவரது முதன்மைக் கனவு.
மேலைநாடுகளில் இருந்த 'கேட்', 'கேம்' போன்ற இயந்திரவியலின் புதுமைகளை பற்றி கலாம் ஆரம்பத்தில் இருந்தே வலியுறுத்தி வந்தார். அவரது சீரிய முயற்சியால் பல கல்லுாரிகளில் இந்த பாடங்கள் இடம்பெற்றன.
உற்பத்தி துறை தான் இந்தியாவின் வருங்காலம் என்றார் கலாம். இன்று 'மேக் இன் இந்தியா' திட்டத்தில் அரசு கணித்திருக்கும் அளவுகள், அப்துல் கலாமின் கணிப்புகளுடன் பொருந்துகின்றன.
சிறப்பான சாலைகள் இல்லாதது தான் இந்தியாவின் உற்பத்திதுறை வளர்ச்சியை பாதிக்கும் காரணியாக உள்ளது. உள்கட்டமைப்பு வசதிகளை வளர்க்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது என்று கூறினார். அதன்படிதான் அப்போது மத்திய அரசு தங்க நாற்கர சாலை திட்டத்தையும், துறைமுகங்களை இணைக்கும் சாலைகளையும் அமைத்தது.
இங்குள்ள தொழில்களையும் அதில் பணிபுரியும் பணியாட்களின் திறனையும் அதிகரிக்க, சிறப்பு பயிற்சிகளை அளிக்க வேண்டும்; அதன் மூலம் இந்தியாவுக்கு அனைத்து துறைகளிலும் வல்லமைமிக்க மனித வளத்தை அளிக்க முடியும். இந்த கனவுகளை இந்திய இளைஞர்களால் எளிதில் சாத்தியப்படுத்த முடியும் என நம்பியவர் கலாம்.
அவரது 'கனவு இந்தியா' உருவாக வேண்டும். அவர் சொன்ன பாதை உருவாகி கொண்டிருக்கிறது. அவர் கனவு கண்ட தேசத்தை அவருக்காக உருவாக்கி தருவது, அவர் நம்பிக்கை வைத்த இளைஞர்களின் கடமை.