/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லாறு பழப்பண்ணை விவகாரம் சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம்: வேளாண் துறை அமைச்சர் தகவல்
/
கல்லாறு பழப்பண்ணை விவகாரம் சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம்: வேளாண் துறை அமைச்சர் தகவல்
கல்லாறு பழப்பண்ணை விவகாரம் சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம்: வேளாண் துறை அமைச்சர் தகவல்
கல்லாறு பழப்பண்ணை விவகாரம் சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம்: வேளாண் துறை அமைச்சர் தகவல்
ADDED : செப் 05, 2024 12:15 AM

கோவை : கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான வேளாண் ஆய்வுக் கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில், வேளாண் துறை அமைச்சர் பன்னீர் செல்வம் தலைமையில் நடந்தது.
ஆய்வுக்கூட்டத்துக்குப் பின், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நிருபர்களிடம் கூறுகையில், ''கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களிலும், வேளாண்மையை மேம்படுத்துவது, உணவு தானிய உற்பத்தியின்போது, உடல்நலத்தைப் பாதிக்காத ஆரோக்கியமான தானியங்களை உற்பத்தி செய்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.
வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியதாவது:
கேரள வாடல் நோய், தென்னையை தீவிரமாக பாதித்தது. வேளாண் பல்கலை துணை வேந்தர், மாணவர்கள், துறை சார்ந்த அதிகாரிகளுடன் பொள்ளாச்சியில் தோப்புகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, உரிய பாதுகாப்பு, நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். தொடர் முயற்சியால், கேரள வேர்வாடல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
யானை வழித்தடத்துக்காக, கல்லாறு பழப்பண்ணையை காலி செய்யும் விவகாரம் நீதிமன்ற நடவடிக்கையில் உள்ளது. பண்ணையைப் பாதுகாக்க, சட்ட ரீதியாக நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
கடந்த 4 ஆண்டு வேளாண் பட்ஜெட்களில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், விவசாயிகளைச் சென்றடைந்துள்ளனவா என்பதை ஆய்வு செய்து வருகிறோம்.
நெல் கொள்முதலுக்காக 985 கோடி ரூபாய் ஒதுக்கி, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட, 13 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.945 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து கிராம வேளாண் திட்டத்தின் கீழ், 46 லட்சம் தென்னங்கன்றுகள், மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன. விவசாயிகளின் பிரச்னையை தினமும் கவனித்து தீர்த்து வருகிறோம்.
இவ்வாறு, அமைச்சர் தெரிவித்தார்.
எம்.பி.,க்கள் ராஜ்குமார், ஈஸ்வரசாமி, வேளாண் துறை முதன்மைச் செயலர் அபூர்வா, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை ஆணையர் பிரகாஷ், வேளாண்துறை இயக்குனர் முருகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் 12 விவசாயிகளுக்கு ரூ.11 லட்சம் மானியத்தில், ரூ.28 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.