/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஏரியா' ஒதுக்கீடு செய்வதற்கு 'கப்பம்' ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் குமுறல்
/
'ஏரியா' ஒதுக்கீடு செய்வதற்கு 'கப்பம்' ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் குமுறல்
'ஏரியா' ஒதுக்கீடு செய்வதற்கு 'கப்பம்' ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் குமுறல்
'ஏரியா' ஒதுக்கீடு செய்வதற்கு 'கப்பம்' ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் குமுறல்
UPDATED : மார் 22, 2024 12:20 PM
ADDED : மார் 22, 2024 12:20 AM
கோவை:திடக்கழிவு மேலாண்மையில் துாய்மை பணிகள் ஒதுக்கீடு செய்ய ஆயிரக்கணக்கில் சுகாதார பிரிவினருக்கு 'கப்பம்' கட்ட வேண்டியிருப்பதாக, ஒப்பந்த பணியாளர்கள் புலம்புகின்றனர்.
கோவை மாநகராட்சியில் 2,129 நிரந்தர துாய்மை பணியாளர்கள், 4,203 ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் உள்ளனர். திடக்கழிவு மேலாண்மை பணிகளை 'அவுட் சோர்சிங்' முறையில் தனியார் மேற்கொண்டு வரும் நிலையில், ஒப்பந்த பணியாளர்கள் துாய்மை பணிகளில் முழுமையாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நிரந்தர துாய்மை பணியாளர்கள், பூங்காக்கள் பராமரிப்பு உட்பட பணிகளை மேற்கொள்கின்றனர். இந்நிலையில், வார்டுகளில் பணியை தக்கவைக்கவும், துாய்மை பணிகளுக்கு தெருக்களை ஒதுக்கீடு செய்யவும், ஒப்பந்த பணியாளர்களிடம் மாநகராட்சி சுகாதார பிரிவினர், ஒப்பந்த சுகாதார மேற்பார்வையாளர்கள் பணம் வாங்குவதாக புலம்பல்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து, பி.எம்.எஸ்., துாய்மை பணியாளர் பிரிவு அமைப்பு செயலாளர் ஸ்டாலின் பிரபு, மாநகராட்சி கமிஷனருக்கு அனுப்பியுள்ள மனு:
தற்போது திடக்கழிவு மேலாண்மை பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நிரந்தர பணியாளர்கள் பணிபுரிந்த இடத்தில் ஒப்பந்த பணியாளர்கள் துாய்மை பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், வார்டுகளில் துாய்மை பணிகள் ஒதுக்கீடு செய்ய ஒப்பந்த பணியாளர்களிடம், சுகாதார பிரிவு அலுவலர்கள், ஒப்பந்த சுகாதார மேற்பார்வையாளர்கள் சிலர் பணம் வாங்குகின்றனர். புதிதாக பணிக்கு வருபவர்களிடம் ரூ.5,000, தெருக்களை சுத்தம் செய்பவர்களிடம் ரூ.2,000க்கும் அதிகமாகவும் பணம் பெற்று பணிகளை ஒதுக்குகின்றனர்.
குறிப்பாக, மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இந்நிலை காணப்படுகிறது. பலமுறை மண்டல சுகாதார ஆய்வாளர்களிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அலுவலர்களுக்கு வேண்டியவர்களுக்கு எளிய பணி ஒதுக்கீடு செய்கின்றனர்.
காசு கொடுத்தால்தான் வேலையே உறுதி என்ற நிலை காணப்படுவதாக பணியாளர்கள் புலம்புகின்றனர். எனவே, பணம் வசூலித்துக்கொண்டு பணி ஒதுக்கீடு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, ஒப்பந்த பணியாளர்களின் வாழ்வதாரம் காக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

