/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காரமடை தேர்த்திருவிழா கடைகள் ஏலம்
/
காரமடை தேர்த்திருவிழா கடைகள் ஏலம்
ADDED : மார் 01, 2025 05:42 AM
மேட்டுப்பாளையம்; காரமடை தேர்த்திருவிழா சிறப்பு கூட்டத்தில், கேளிக்கை விளையாட்டுகள், தற்காலிக கடைகள் அமைக்க விடப்பட்ட ஏலம் தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்படாமல் நிராகரிப்பு செய்யப்பட்டன.
காரமடை நகராட்சியில் காரமடை அரங்கநாத சுவாமி கோவில் தேர் திருவிழாவையொட்டி மாமன்ற அவசரக் கூட்டம் நேற்று நகராட்சி தலைவர் உஷா தலைமையில், கமிஷனர் மதுமதி, துணை தலைவர் மல்லிகா ஆகியோர் முன்னிலையில் நடந்தது.
இதில், காரமடை அரங்கநாத சுவாமி தேர்த் திருவிழாவையொட்டி கேளிக்கை விளையாட்டுகள் மற்றும் தற்காலிக கடைகள் அமைக்க ஏலம் விடப்பட்டதில் வரப்பெற்ற, ஏலம் ஒப்பந்தப்புள்ளி தொடர்பான விவரங்கள் குறித்து மூன்று தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டன.
அதே போல் சிறப்பு பொது சுகாதாரப்பணிகள் குறித்து ஒரு தீர்மானம் வைக்கப்பட்டது. இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
கூட்டத்தில் கவுன்சிலர் குருபிரசாத்(தி.மு.க.) பேசுகையில், ''இதுவரை 7 முறை ஏலம் நடைபெற்றுள்ளது. ஆனால் அது தொடர்பான முழு விவரங்கள் கவுன்சிலர்களுக்கு அளிக்கப்படவில்லை. ஏலத்தில் வெளிப்படத்தன்மை இல்லை.
தற்போது கோரப்படும் ஒப்பந்தப்புள்ளி, கடந்த ஆண்டை காட்டிலும் குறைவானது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். மீண்டும் ஏலம் விடப்பட வேண்டும்,'' என்றார்.
கவுன்சிலர் வனிதா (அ.தி.மு.க.):
காரமடை ரயில்வே மேம்பாலத்திற்கு கீழ் உள்ள சுரங்க பாதையில் தேங்கி இருந்த மழைநீர் அகற்றப்பட்ட போதிலும், மீண்டும் தண்ணீர் தேங்கியுள்ளது.
சுரங்கபாதையை ஒட்டி செல்லும் சாக்கடை வடிகாலில் இருந்து கசிவு ஏற்பட்டு மீண்டும் தண்ணீர் தேங்குகிறது. தண்ணீர் வருவதை முற்றிலும் தடுக்க நடவடிக்கை வேண்டும்.
தேர் திருவிழாவின் போது 27வது வார்டு பகுதி யில் துாய்மைப் பணிகள் பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கவுன்சிலர்கள் பேசினார்கள்.
பின் காரமடை நகராட்சிக்குட்பட்ட காமராஜர் சாலையில் உள்ள நவீன கழிப்பிடத்தை ஏலம் விடுவது தொடர்பான தீர்மானம் மட்டும் நிறைவேற்றப்பட்டது.
ஐந்து தீர்மானங்களில் ஒன்று மட்டுமே நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.----