/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவைக்கான சிறுவாணி குடிநீர் அளவை குறைத்தது கேரளா
/
கோவைக்கான சிறுவாணி குடிநீர் அளவை குறைத்தது கேரளா
UPDATED : பிப் 10, 2025 05:44 AM
ADDED : பிப் 10, 2025 05:33 AM

கோவை : சிறுவாணி அணைக்கான பராமரிப்பு தொகை வழங்க தாமதித்ததால், கோவைக்கு வழங்கும் குடிநீர் அளவை, கேரள நீர்ப்பாசனத்துறையினர் குறைத்து விட்டனர். அவர்களுடன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பேசி வருகின்றனர்.
கோவை மாநகராட்சி மற்றும் வழியோர கிராம மக்களுக்கு சிறுவாணி அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீரே பிரதானம். சிறுவாணியில் இருந்து நாளொன்றுக்கு, 10 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்படும். அணை நீர் மட்டம், 35 அடியாக (மொத்த உயரம் - 50 அடி) இருக்கிறது. சில நாட்களாக, 5 கோடி லிட்டரே தண்ணீர் சப்ளை செய்யப்பட்டது. வால்வு பழுது சரி செய்வதாக, கோவை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் நம்பிக் கொண்டிருந்தனர்.
தற்போது பில்லுார் மூன்றாவது திட்டத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்வதால், மாநகராட்சிக்கு தேவையான குடிநீர் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில், சிறுவாணி அணைக்கான பராமரிப்பு தொகையை கேட்டு, தண்ணீர் சப்ளை அளவை கேரள அரசு குறைத்திருப்பது தெரியவந்துள்ளது. உடனடியாக, இரண்டு கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டு, கேரள நீர்ப்பாசனத்துறையிடம் குடிநீர் வடிகால் வாரியத்தினர் பேசி வருகின்றனர்.
இதுதொடர்பாக, அரசு அதிகாரிகளிடம் விசாரித்தபோது, 'சிறுவாணி அணை பராமரிப்புக்காக, கேரள அரசுக்கு மாதந்தோறும் பணம் செலுத்த வேண்டும். அவ்வகையில், 13 கோடி ரூபாய் நிலுவை இருக்கிறது. அத்தொகை கொடுக்க தாமதமானதால், வால்வு பகுதியை சற்று மூடியிருப்பதால், கோவைக்கு வரும் தண்ணீர் அளவு குறைந்திருக்கிறது.
'சமீபகாலமாக, 7.2 கோடி லிட்டர் சப்ளை செய்யப்பட்டு வந்தது. கடந்த நான்கு நாட்களாக, நாளொன்றுக்கு, 2.2 கோடி லிட்டர் வீதம் தண்ணீர் வரத்து குறைந்திருக்கிறது. மாற்று ஏற்பாடு செய்ய முயற்சித்து வருகிறோம். கேரள நீர்ப்பாசனத்துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து பேசி வருகிறோம்.
'விரைவில் வால்வு முழுமையாக திறக்கப்பட்டு, தேவையான தண்ணீர் திறக்கப்படும்' என்றனர்.

