/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சமையலறை வடிவமைப்பில் வேண்டும் கூடுதல் கவனம்
/
சமையலறை வடிவமைப்பில் வேண்டும் கூடுதல் கவனம்
ADDED : மே 18, 2024 01:02 AM

வீட்டில் உள்ளவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கான அடிப்படை அம்சமே, சமையலறையில் தான் உருவாகிறது.
கட்டுமானத்துறையில் ஏற்பட்டுள்ள பல்வேறு முன்னேற்றங்களால் சமையலறை அமைப்பது தொடர்பான வழிமுறைகளும் மாறி விட்டன.
குறிப்பாக, வீடுகளில் சமையலறை என்பது, மிகமிக பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த இடமாக அமைய வேண்டும் என்பதை மக்கள் உணர்ந்து வருகின்றனர்.
அதே நேரத்தில், எங்கள் வீட்டு சமையலறை நவீன முறையில் இருக்க வேண்டும் என்பதில், பலரும் கவனம் செலுத்தி வருகின்றனர். இதன் விளைவாக, பல இடங்களில், சமையலறைக்கு கூட ஏ.சி., பொருத்தும் அளவுக்கு முக்கியத்துவம் உருவாகி உள்ளது என்பதை மறுக்க முடியாது.
கட்டடத்தின் மொத்த பரப்பளவில் சமையலறைக்கான அளவு எவ்வளவு என்பதை வரைபட தயாரிப்பு நிலையிலேயே முடிவு செய்ய வேண்டும். இதில் குறைந்தபட்சம், 150 சதுரடியாவது சமையலறையின் பரப்பளவு இருப்பதை உறுதி செய்வது அவசியம் என்று கூறப்படுகிறது.
பெரும்பாலான இடங்களில், வீடுகள் குறைந்தபட்சம் 600 சதுரடிக்கு மேல் தான் கட்டப்படுகிறது.
இதில், 150 அடியை சமையலறைக்கு ஒதுக்குவதில் பிரச்னை வராது என்பதை மக்கள் புரிந்து செயல்பட வேண்டியது அவசியம்.
ஆனால், வீட்டில் வரவேற்பறை, பிற அலங்கார அறைகளை தாராளமாக அமைக்க வேண்டும் என்பதற்காக, சமையலறையின் பரப்பளவை குறைக்கக் கூடாது. சமையலறைக்கு போதுமான எண்ணிக்கையில், ஜன்னல்கள் இருப்பதை வரைபட நிலையிலேயே உறுதி செய்ய வேண்டும்.
சமையலறையில் எந்தெந்த இடங்களில் மின்சார இணைப்புகள் தேவை என்பதை அறிந்து, அதற்கு ஏற்ற வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இத்துடன், காஸ் சிலிண்டரை பாதுகாப்பாக வைப்பதற்கான இட வசதியை முறையாக அமைக்க வேண்டும்.
வீட்டின் வரவேற்பறையில் இருந்து சமையலறையை பார்க்கும் அளவுக்கு அமைக்காமல், தனித்து இருக்கும் வகையில் வடிவமைக்க வேண்டும்.
தேவையில்லாத நபர்கள் உள்ளே வருவதை தடுக்கும் வகையிலும் சமையலறையின் இருப்பிடம் அமைய வேண்டும் என்கின்றனர், கட்டுமான துறை வல்லுனர்கள்.

