ADDED : மே 26, 2024 12:29 AM

எம்.பி.ஏ., பட்டதாரியாக இருந்தும், கோலி சோடா தொழிலை கையில் எடுத்து, அசத்தி வருகிறார் கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த ஜெஷ்வந்த் சூரியா, 25.
கோவையில் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு, சிவில் இன்ஜி., எம்.பி.ஏ., படிப்பை சென்னையில் முடித்த சூரியா, 2 ஆண்டுகள் கோவையிலும், ஒரு ஆண்டு பெங்களூரிலும் மனிதவள மேம்பாட்டு அலுவலராக பணியாற்றியுள்ளார்.
சிறு வயதில் இருந்தே தொழில் துவக்கி, வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்பதே சூரியாவின் லட்சியம்.
கடந்த டிச., மாதம், கோவையில் 'கிளாசிக் கோலி சோடா' என்ற சோடா தயாரிப்பு நிறுவனத்தை துவங்கினார். தற்போது மார்க்கெட்டில் இருக்கும் போட்டிக்கு ஏற்ப, தன்னையும் தயார் படுத்திக்கொண்டு களத்தில் இறங்கியுள்ளார்.
கோலி சோடா என்றாலே பன்னீர், லெமன், நன்னாரி மற்றும் ஜிஞ்சர் என நான்கு வகை பாரம்பரியமாக உள்ளது. ஆரஞ்ச், புளூபெரி போன்ற சுவைகளால் மக்களை கோலி சோடா பக்கம் திரும்ப வைத்துள்ளார்.
இவற்றையும் தாண்டி, சூரியா பிளாக் கரென்ட், வாட்டர் மெலான், கிரான்பெரி போன்ற சுவைகளை புகுத்தி உள்ளார். மேலும், 10 சுவைகளில் சோடா தயார் செய்கிறார்.
பல இளைஞர்களை தொழில் முனைவோராக மாற்றும் நோக்கில், குறைந்த விலையில் 'டீலர்ஷிப்' அளித்து வருகிறார்.
ஜெஷ்வந்த் சூரியா கூறுகையில், ''குடும்பத்தில் எல்லோரும் தொழில் முனைவோரக இருந்ததால், எனக்கும் தொழில் செய்து பெரிய ஆளாக வேண்டும் என்ற எண்ணம், சிறு வயதில் இருந்தே இருந்தது.
தரமான, சுகாதாரமான முறையில் தயார் செய்து கொடுப்பதால், நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. சுய தொழில் செய்யும் போது அதிக வருமானம் கிடைப்பதுடன், மன நிறைவும் ஏற்படுகிறது,'' என்றார்.