/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஐயப்பன், விநாயகர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
/
ஐயப்பன், விநாயகர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
ADDED : ஜூலை 11, 2024 11:16 PM
மேட்டுப்பாளையம் : சிறுமுகையில் ஐயப்பன் கோவிலிலும்,மேட்டுப்பாளையம் அருகே விநாயகர் கோவிலிலும், இன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
சிறுமுகை அருகே எலகம்பாளையத்தில் கீழ் சபரி என்னும் ஐயப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றன. கும்பாபிஷேகம் விழா கடந்த பத்தாம் தேதி துவங்கியது.
நேற்று காலை கணபதி ஹோமத்துடன் பூஜைகள் நடந்தன. மாலையில் சுதர்சன ஹோமம், பகவதி சேவகலா மண்டப சமஸ்காரம் ஆகிய பூஜைகள் நடந்தன. இன்று காலை திரவிய கலச பூஜையும், தேவர்களுக்கு அபிஷேகமும் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து, 9:00 மணிக்கு கணபதி, முருகன், சிவலிங்கம், மகாவிஷ்ணு, விஷ்ணு துர்கா, நவகிரகம், நாகராஜா, கருப்பண்ணன் ஆகிய சுவாமிகளுக்கும், விமான கலசத்திற்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
அதைத் தொடர்ந்து, 9:30லிருந்து, 10:30 மணிக்குள், ஐயப்பன் சுவாமிக்கு பஞ்ச வாத்தியம் முழங்க, மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை ஐயப்பன் கோவில் திருப்பணிக் குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில், இம்மானுவேல் நகர் செல்வபுரத்தில், செல்வ விநாயகர் மற்றும் செல்வ மாரியம்மன் ஆகிய கோவில்கள் உள்ளன. இக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றன.
கும்பாபிஷேகம் விழா நேற்று காலை மகா கணபதி ஹோமத்துடன், கோ பூஜை, தீபாராதனையுடன் துவங்கியது. இன்று காலை விநாயகர் வழிபாடும், இரண்டாம் கால யாக பூஜை செய்த பின், 7:30 மணியிலிருந்து, 9:00 மணிக்குள், யாகசாலையில் இருந்து தீர்த்த கலசங்கள் புறப்பட்டு, கோபுர கலசத்தின் மீதும், சுவாமிகள் மீதும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
திருப்பூர் திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில் அர்ச்சகர் பாலசுப்ரமணிய சிவாச்சாரியார், யாக வேள்வி பூஜைகளை செய்து, கும்பாபிஷேகம் செய்ய உள்ளார்.