/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழையால் நிரம்பியது குறிச்சிக்குளம் மெல்ல உயர்கிறது நிலத்தடி நீர்மட்டம்
/
மழையால் நிரம்பியது குறிச்சிக்குளம் மெல்ல உயர்கிறது நிலத்தடி நீர்மட்டம்
மழையால் நிரம்பியது குறிச்சிக்குளம் மெல்ல உயர்கிறது நிலத்தடி நீர்மட்டம்
மழையால் நிரம்பியது குறிச்சிக்குளம் மெல்ல உயர்கிறது நிலத்தடி நீர்மட்டம்
ADDED : ஜூலை 22, 2024 11:07 PM

கோவை:பருவமழையால் குறிச்சி குளம் முழுக்கொள்ளளவையும் எட்டி, உபரிநீர் வெளியேறி வருகிறது.
கோவையின் தெற்கு எல்லையில் அமைந்திருக்கும் குறிச்சி குளம், 50க்கும் மேற்பட்ட கிராமங்களின் நிலத்தடி நீர்மட்ட ஆதாரத்துக்கு முக்கிய காரணியாக உள்ளது. கிணறு மற்றும் வீட்டு குடிநீர் ஆதார போர்வெல்கள் வற்றாது.
கடந்த ஜூன் இறுதி முதல் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது. மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்த மழையால், நொய்யல் வெள்ளம் கோவை அணைக்கட்டை கடந்து குறிச்சி குளத்துக்கு வரத்துவங்கியது.
மழைகாலங்களில், இக்குளத்துக்கு புட்டுவிக்கியில் உள்ள குறிச்சி அணைக்கட்டில் இருந்து தண்ணீர் வரும். செங்குளம் நிரம்பியும், அதன் உபரிநீர் இடையர்பாளையம், பாலக்காடு ரோட்டை கடந்து வரும். இரு வழிகளில் இருந்தும் குளத்துக்கு நீர்வரத்து இருந்தால், குளம் முழு கொள்ளளவையும் எட்டும்.
இந்த ஆண்டும் அதேபோல், குளத்துக்கு நீர்வரத்து இருந்ததால், குறிச்சி குளம் வேகமாக நிரம்பத் துவங்கியது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், குறிச்சி குளம் முழுக்கொள்ளளவையும் எட்டியது.
இதன் காரணமாக குளத்தில் இருந்து, 'களிங்கு' வாயிலாக உபரிநீர் வெளியேறி வருகிறது. குளத்தின் நீர்இருப்பு, வெளியேற்றம் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.