/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நல்லமுடி காட்சிமுனையில் குதுாகலம்! சுற்றுலா பயணியர் ஒத்துழைக்க அறிவுரை
/
நல்லமுடி காட்சிமுனையில் குதுாகலம்! சுற்றுலா பயணியர் ஒத்துழைக்க அறிவுரை
நல்லமுடி காட்சிமுனையில் குதுாகலம்! சுற்றுலா பயணியர் ஒத்துழைக்க அறிவுரை
நல்லமுடி காட்சிமுனையில் குதுாகலம்! சுற்றுலா பயணியர் ஒத்துழைக்க அறிவுரை
ADDED : மே 17, 2024 11:28 PM

வால்பாறை;வால்பாறை, நல்லமுடி காட்சிமுனையில் சுற்றுலாப்பயணியர், இயற்கை அழகை கண்டு களிக்கின்றனர். இங்கு விதிமுறை மீறாமல் ஒத்துழைக்க வேண்டுமென வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
வால்பாறை சுற்றுலாத்தலமாக உள்ளதால், உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து, சுற்றுலாப் பயணியர் அதிகளவு வந்து செல்கின்றனர். இங்குள்ள, சக்தி -- தலனார் செல்லும் ரோட்டில் உள்ள வியூ பாயின்ட், சிறுகுன்றா கூழாங்கல் ஆறு, சோலையாறு அணை, அட்டகட்டி ஆர்கிட்டோரியம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை ஆர்வத்துடன் சுற்றி பார்க்கின்றனர்.
மேலும், கண்களுக்கு விருந்து அளிக்கும் வகையில் பச்சைப்பசேலென உள்ள தேயிலை தோட்டங்களில், 'செல்பி' எடுத்து சுற்றுலாப் பயணியர் மகிழ்கின்றனர். தற்போது, கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், குடும்பத்துடன் சுற்றுலாப் பயணியர், வால்பாறையில் திரண்டு வருகின்றனர்.
காட்சிமுனைக்கு விசிட்
வால்பாறையில் அமைந்துள்ள புகழ் பெற்ற சுற்றுலாத்தலமாக, நல்லமுடி காட்சி முனை பகுதி உள்ளது. அதிகம் உயரம் கொண்ட இந்த காட்சி முனையில் நின்று வால்பாறையின் தேயிலை தோட்டங்கள், அழகிய மலைத்தொடர்கள் முழுவதையும் கண்டு களிக்கலாம்.
இங்கு, சுற்றுலாப் பயணியர் பாதுகாப்பு வசதிக்காக, வனத்துறை சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் அருகே நின்று இயற்கை அழகை கண்டு ரசிப்பதுடன், மொபைலில் போட்டோ எடுத்தும், 'செல்பி' எடுத்தும் மகிழ்கின்றனர்.
ஒரு சிலர் ஆர்வக்கோளாறில், தடுப்பு கம்பி மீது அமர்ந்தும், கம்பியை தாண்டி சென்றும் 'போட்டோ ஷூட்' நடத்துகின்றனர். ஆபத்தை உணராமல் சுற்றுலாப் பயணியர் அத்துமீறுவதால், அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, வனத்துறை அதிகாரிகள், சுற்றுலா வருவோரை எச்சரிப்பதுடன், அத்துமீறல்களில் ஈடுபடாமல் இருக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என, அறிவுறுத்தி வருகின்றனர்.

