/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'மிகப்பெரிய பொருளாதார நாடு இலக்கை எட்ட எரிசக்தித் துறையில் தன்னிறைவு பெற வேண்டும்'
/
'மிகப்பெரிய பொருளாதார நாடு இலக்கை எட்ட எரிசக்தித் துறையில் தன்னிறைவு பெற வேண்டும்'
'மிகப்பெரிய பொருளாதார நாடு இலக்கை எட்ட எரிசக்தித் துறையில் தன்னிறைவு பெற வேண்டும்'
'மிகப்பெரிய பொருளாதார நாடு இலக்கை எட்ட எரிசக்தித் துறையில் தன்னிறைவு பெற வேண்டும்'
ADDED : ஆக 26, 2024 10:38 PM
கோவை;வரும் 2047ல் உலகின் மிகப்பெரும் பொருளாதார நாடாக இந்தியா வளர, எரிசக்தித் துறையில் தன்னிறைவு அடைவது அவசியம் என, வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதா லட்சுமி பேசினார்.
கோவை, வேளாண் பல்கலையில், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், நீடித்த ஆற்றல் குறித்த 'ஈகோபெஸ்ட்24' எனும், சர்வதேச கருத்தரங்கு நடந்தது.
கருத்தரங்கில், வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதா லட்சுமி பேசியதாவது:
ஐ.நா.சபை 17 துறைகளில் நீடித்த வளர்ச்சி இலக்குகளை அறிவித்துள்ளது. அதில் முக்கியமானது ஆற்றல். 2047ல் உலகின் முதல் பெரிய பொருளாதார நாடாக மாற இலக்கு நிர்ணயித்து, செயல்பட்டு வருகிறோம். அதற்கு, எரிசக்தித் துறையில் தன்னிறைவு அடைவது அவசியம்.
உலகில் அதிக எரிசக்தி பயன்படுத்தும் நாடுகளில், இந்தியா 4வது இடத்தில் உள்ளது. இது, வளரும் நாடு என்ற இடத்தில் இருந்து, வளர்ந்த நாடு என்பதை நோக்கி நகர்வதற்கான, வளர்ச்சிக் குறியீடு.
கடந்த ஜூலை நிலவரப்படி, ஜி.டி.பி.,யில் எரிசக்தி கொள்முதலுக்காக அதிகம் செலவிடும் நாடுகளில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. இந்த இறக்குமதி அளவைக் குறைக்க வேண்டும்.
புதுப்பிக்கத் தக்க எரிசக்தி உற்பத்தியில், 179 கிகாவாட் உற்பத்தித் திறனுடன் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. இது நம் மொத்த உற்பத்தித் திறனில், 40 -50 சதவீதம்.
இதனை 80 - 90 சதவீதமாக உயர்த்த வேண்டும்; 2030ல் 500 கிகா வாட்டாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புனல் மின் திட்டம், சிறு புனல் மின்திட்டம், காற்றாலை, சோலார், உயிரிஎரிபொருள், குப்பையில் இருந்து மின்சாரம் என, இவற்றின் திறனை அதிகரிப்பது முக்கியம்.
இவ்வாறு, அவர் பேசினார்.
பொறியியல் துறை முதன்மையர் ரவிராஜ், இணைப் பேராசிரியர் விஜயகுமாரி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைத் தலைவர் ரமேஷ் உட்பட பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.