ADDED : பிப் 21, 2025 11:17 PM
சூலுார்; சூலுார் வட்டாரத்தில், தொழு நோய் பரிசோதனை முகாம் நடக்கிறது.
தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ், சூலுார் வட்டாரத்தில் தொழு நோய் கண்டுபிடிப்பு முகாம் நடந்து வருகிறது. வரும், 28 ம்தேதி வரை நடக்கிறது.
சோமனுார், கருமத்தம்பட்டி, வாகராயம்பாளையம், இருகூர் உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலைய பகுதிகளில் உள்ள கிராமங்களில், சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் தன்னார்வலர்கள், 246 பேர் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை, 1 லட்சத்து, 4 ஆயிரத்து, 107 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இருகூர், அத்தப்ப கவுண்டன் புதுார் உள்ளிட்ட கிராமங்களில் நடந்த களப்பணியினை துணை இயக்குனர் (தொழுநோய்) சிவகுமாரி, வட்டார மருத்துவ அலுவலர் உமர் பரூக் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலர் கூறுகையில், ''இதுவரை பரிசோதிக்கப்பட்டவர்களில் இருவருக்கு தொழு நோய் ஆரம்ப அறிகுறி கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தொழுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முகாம் நடத்தப்படுகிறது.
வட்டாரத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தொழுநோய் பரிசோதனை நடத்த உள்ளோம்,'' என்றார்.