ADDED : ஆக 03, 2024 06:38 AM
ஆடிப்பெருக்கு... மண்ணுக்கும் நீருக்குமான கொண்டாட்டம். தமிழ்ச் சமூகத்தின் மரபு சார்ந்த பண்டிகை. வேளாண் சமூக பரிணமித்த ஆதித் தமிழன் நீரை நம் மகத்தான சொத்தாக அடையாளம் கண்டு, அதைக் கொண்டாடிய பெருவிழா. பருவமழை தவறாமல் பெய்ய, ஆடியில் ஆறுகள் பெருக்கெடுக்கும்.
ஆடிப் பதினெட்டாம் நாள், நதியின் இரு கரைகளிலும் நுரைத்துத் ததும்பியபடி புதுவெள்ளம் பெருக்கெடுத்துப் பாயும். இந்த பருவமழைக் காலம் விவசாயத்துக்கு முக்கியமானது.
ஆறுகள் பெருக்கெடுத்து வெள்ளம் பாய்கையில் உள்ளம் நிறைகிறது. ஆறுகள் எப்போதும் இப்படி இருக்க வேண்டுமெனில், அவற்றை நாம் பாதுகாப்பது அவசியம்.
நதியை நம் குலமகளாகப் போற்றி, அவளுக்கு நன்றி தெரிவிக்கும் திருநாளாக கொண்டாடப்பட்ட இந்நாளை, இனி அவளைப் பாதுகாக்கும் நாளாகவும் கொண்டாட வேண்டும். கடந்த தலைமுறை நன்றி சொன்னது. நாம் அடுத்த தலைமுறைக்கு பாதுகாத்து வைப்போம்.