
கோவை:கோவை காந்திபுரம், கிராஸ்கட் ரோட்டில் உள்ள மாநகராட்சி பள்ளியில், 'நம்ம ஊரு சந்தை' நடந்தது.
'இயல்வாகை' சூழலியல் அமைப்பு சார்பில், கடந்த 2018 முதல் இந்த சந்தை நடத்தப்பட்டு வருகிறது. மாதத்தின் இரண்டாவது ஞாயிறு, காலை 10:00 முதல் பிற்பகல் 3:00 மணி வரை நடத்தப்படுகிறது.
நேற்று நடந்த சந்தையில், விவசாயிகள் உற்பத்தி செய்த மதிப்புக்கூட்டிய பொருட்கள், சிறு தொழில்முனைவோரின் பொருட்கள், நாட்டு காய்கறி, கீரை விதைகள் வைக்கப்பட்டிருந்தன.
மாப்பிள்ளை சம்பா, காட்டுயானம், பூங்கார், கறுப்பு கவுனி உட்பட பாரம்பரிய அரிசி ரகங்கள், எண்ணெய், சிறுதானிய இனிப்புகள், நெல்லி வற்றல், நெல்லி இட்லிப்பொடி, சிறுதானிய சத்து மாவு, பிரண்டை எண்ணெய், இயற்கை வழியில் விளைவிக்கப்பட்ட காய்கறி, வீட்டு தோட்டத்தில் வைக்கப்படும் நாற்றுகள், நாட்டுக் கோழி முட்டை, காடை முட்டை, கருப்பட்டி ஆகியவற்றை, ஏராளமான பொதுமக்கள் வாங்கி சென்றனர்.
நிர்வாகி அழகேஸ்வரி கூறுகையில், ''பொதுமக்கள், தரமான அதே நேரம் உடலுக்கு தீங்கு விளைவிக்காத பொருட்கள் வாங்கி பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில், 'நம்ம ஊரு சந்தை' துவக்கப்பட்டது.
சந்தையில் பங்கேற்கும் விவசாயிகளின் தோட்டத்துக்கு முதலில் நாங்கள் சென்று, ஆர்கானிக் வழியில் பொருட்களை உற்பத்தி செய்கிறார்களா என்று பரிசோதிப்போம். விற்பனைக்கு இருக்கும் மற்ற பொருட்களுக்கும், அதே நடைமுறை தான். இதனால், பொதுமக்கள் தரமான பொருட்களை வாங்கி செல்வது உறுதி செய்யப்படுகிறது,'' என்றார்.

