/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அதிவேக வளர்ச்சியில் லாஜிஸ்டிக்ஸ் துறை!
/
அதிவேக வளர்ச்சியில் லாஜிஸ்டிக்ஸ் துறை!
ADDED : மார் 26, 2024 01:13 AM

கோவை;லாஜிஸ்டிக்ஸ் துறை அடுத்த ஐந்து ஆண்டுகளில், 10.5 சதவீத அதிவேக வளர்ச்சி பெறும் என கணிக்கப்பட்டுள்ளதால், இத்துறை தேர்வு செய்யும் மாணவர்களுக்கு, எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என, நிபுணர் செந்தில்ராஜா தெரித்தார்.
மேலும் அவர் பேசியதாவது:
லாஜிஸ்டிக் துறை என்பது, நீர், நிலம், வான் வழி போக்குவரத்து மூலமாக, உற்பத்தி பொருளை, வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதாகும். தொழில் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை, வாடிக்கையாளர்களிடம் சேர்க்க, பேக்கிங் செய்வது, உணவு பொருட்களாக இருந்தால் கெட்டுப்போகாமல் பதப்படுத்துதல், இருப்பு அளவை நிர்ணயித்தல் என பல்வேறு வேலைகள் இதில் அடக்கம்.
இதோடு, பெரிய தொழில் நிறுவனங்களில், ஒவ்வொரு துறைக்கும் பொருட்களை கொண்டு சேர்ப்பது போன்ற பணிகளிலும் இத்துறை மாணவர்களே ஈடுபடுத்துவர். ஏற்றுமதி, இறக்குமதியில் ஒவ்வொரு நாடுகளுக்குமான விதிமுறைகள், பேக்கிங் முறைகள், எந்தெந்த பொருட்களை ஏற்றுமதி செய்வது போன்ற பல்வேறு விஷயங்களை லாஜிஸ்டிக் படிப்புகளில் சொல்லித்தருகின்றனர்.
இதேபோல, எலக்ட்ரானிக் வெகிக்கிள் துறையும் அசுர வளர்ச்சியில் உள்ளது. பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளுக்கு மாற்றாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த வாகனத்தை, முன்னணி நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இதில் தற்போதுள்ள குறைபாடுகளை, தொழில்நுட்ப உதவியோடு சரிசெய்ய வல்லுநர்கள் தேவைப்படுவதால், இத்துறை படிப்புகளுக்கும் மவுசு உள்ளது.
குறைந்த பராமரிப்பு செலவு இருப்பதால், எதிர்காலத்தில் ஈவி வெகிக்கிள் விற்பனை அதிகரிக்கும். இத்துறைகளை பொருத்தவரை, வெளி மாநிலம், நாடுகளில் தற்போது அதிக சம்பளத்தில் வேலை கிடைப்பதால், வெகிக்கிள் டிசைன் அண்டு டெவல்மென்ட், வெகிக்கிள் நெட்வொர்க்கிங், பேட்டரி டெக்னாலஜி போன்ற மாற்றுப்படிப்புகளை தேர்வு செய்ய, மாணவர்கள் முன்வர வேண்டும். கூடுதல் தகவலுக்கு, mcdci100@hotmail.com என்ற இ-மெயிலில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் பேசினார்.

