/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில்பாதைகளுக்கு அருகே அதிகரிக்கும் கொள்ளை
/
ரயில்பாதைகளுக்கு அருகே அதிகரிக்கும் கொள்ளை
ADDED : ஏப் 22, 2024 12:55 AM
கோவை;கொள்ளை சம்பவங்களை தடுக்க, ரயில்பாதைகளுக்கு அருகே, 103 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த, போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கடந்த இரு மாதங்களில், பீளமேடு போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மர்மநபர்கள், கொள்ளையில் ஈடுபட்டனர்.
கொள்ளையில் ஈடுபட்டவர்கள் குறித்து, போலீசார் தனிப்படைகள் அமைத்து தொடர்ந்து தேடி வருகின்றனர். கொள்ளை நடந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
விசாரணையில், மர்ம நபர்கள் ரயில்வே தண்டவாளம் வழியாக வந்து அதை ஒட்டிய பகுதிகளில் கொள்ளையில் ஈடுபடுவது தெரிந்தது.
ரயில்வே தண்டவாளம் அமைந்துள்ள பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால் எளிதில், கொள்ளையில் ஈடுபட்டு தப்பிப்பதும் தெரிந்தது.
இதையடுத்து கோவை இருகூர் - போத்தனுார், கோவை ரயில்வே சந்திப்பு முதல், துடியலுார் வரையில் அமைந்துள்ள ரயில்வே தண்டவாளப் பகுதிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
இதில், தண்டவாளம் அருகில் இருந்து குடியிருப்புக்குள் நுழைவதற்கு ஏதுவான இடங்கள் கண்டறியப்பட்டன. இதையடுத்து அப்பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த, போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

