/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அன்பு, அமைதி, அஹிம்சை... போதிக்கும் கோபுரம்!
/
அன்பு, அமைதி, அஹிம்சை... போதிக்கும் கோபுரம்!
ADDED : மார் 04, 2025 09:48 PM

மாரியம்மன் கோவிலில், விமான கோபுரம், ராஜ கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. அதில், ராஜ கோபுரத்தை சற்று தலை துாக்கி பார்த்ததும், நம் கண்ணில் படுவது காந்தி, ராமகிருஷ்ண பரமஹம்சர், புத்தர் சிலைகள் தான்.
கோவில் கோபுரங்களில் சுவாமி சிலைகள் இருப்பதை பார்த்து இருக்கிறோம்; இதுபோன்று சிலைகள் இருப்பது வேறு எங்கும் இல்லை.
மறைந்த அருட்செல்வர் மகாலிங்கம், காந்தியவாதியாகவே வாழ்ந்தவர். அவர் காந்திய சிந்தனைகளை பரப்பியதுடன், அதை கடைப்பிடிப்பதில் உறுதி கொண்டவராக இருந்தார். காந்தி மீது கொண்ட தீராத பற்றின் காரணமாக, ராஜகோபுரத்தில் மகாத்மா காந்தி சிலையும், அவருடன், புத்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர் என மூவரின் சிலையும் அமைக்கப்பட்டன.
எங்கும் இதுபோன்று சிலை இல்லாத சூழலில் அவர் மீது கொண்ட பற்றின் காரணமாக அருட்செல்வர், மூவரின் சிலையை வைத்துள்ளார். அன்பு, அமைதி, அஹிம்சை போன்றவற்றை வலியுறுத்தியதை போன்று, கோவிலுக்கு வருவோரும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இவர்களது சிலை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆன்மிகமும் செழிக்க வேண்டுமென்றால், ஒழுக்கம், அன்பு என அனைத்தும் இருக்க வேண்டும் என்பதை தெரிவிக்கும் வகையில், கோபுரத்தில் அவர்களது சிலைகள் அமைக்கப்பட்டதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
சாட்டை போடுதல்
தேர்த்திருவிழாவில் மூன்றாம் செவ்வாய் கிழமை முதல், கம்பம் எடுக்கும் வரை கோவில் சார்பாக, பூவோடு கம்பத்தில் வைக்கப்பட்டதும். சிறுவர் முதல் பெரியோர் வரை ஆடவர்கள் சாட்டையால் உடலில் அடித்துக்கொள்வர்.
உடலில் சாட்டையால் அடித்துக்கொண்டு அம்மனை வழிபட்டு நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கமாக உள்ளது. இதை மக்கள் கூடி நின்று பக்தி பரவசமாய் வழிபடுகின்றனர்.
நான்காம் செவ்வாய் கிழமை நள்ளிரவில் அன்னைக்கு அபிேஷக ஆராதனைகள் துவங்கி, அதிகாலை வரையில் நிகழ்கிறது.
கோவில் வளாகத்தில் பூவோடு வைத்தல் நிகழ்ச்சியின் போதும், ஒவ்வொரு வீதியில் இருந்து பூவோடு எடுத்து வரும் போது, வேண்டுதலை நிறைவேற்ற சிலர், சாட்டை போட்டபடியே கோவிலுக்கு வலம் வருவர்.
கொங்கு மண்டலத்தில், ஒரு சில கோவில்களில் மட்டுமே இதுபோன்ற தனிச்சிறப்பு மிக்க நிகழ்வு நடக்கிறது.
நிர்வாகம்
ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் மாரியம்மன் கோவில் உள்ளது. அருட்செல்வர் மகாலிங்கத்துக்கு பிறகு, தற்போதுபரம்பரை அறங்காவலராக அவரது மகன் மாணிக்கம் உள்ளார். கோவில்செயல் அலுவலர் சீனிவாச சம்பத் உள்ளார்.
இக்கோவிலுக்கு முக்கிய வருமானம் கட்டண சீட்டு விற்பனையும், உண்டியல் காணிக்கையும் ஆகும். கோவிலில் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்காக, கோவில் நிர்வாகம் வாயிலாக, நன்கொடையாளர்களிடம் நன்கொடை வசூலிக்கப்படுகிறது.