ADDED : மே 11, 2026 09:31 PM
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில், ஊட்டி உருளைக்கிழங்குகள் விலை மீண்டும் குறைந்து விற்பனை ஆனது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி, கோத்தகிரி, குன்னூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், பல ஆயிரம் ஏக்கரில் ஊட்டி உருளைக்கிழங்குகள் பயிர் செய்யப்படுகின்றன. இந்த கிழங்குகளின் நிறம், தரம், சுவை காரணமாக, மற்ற மாவட்டம் மற்றும் மாநில உருளைக்கிழங்குகளை காட்டிலும், ஊட்டி கிழங்குகளுக்கு மவுசு அதிகம்.
ஊட்டி உருளைக்கிழங்குகள் மேட்டுப்பாளையத்தில் உள்ள மண்டிகள் மற்றும் நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கத்திற்கு கொண்டுவரப்பட்டு, ஏலம் விடப்படுகின்றன. அங்கு நேற்று நடைபெற்ற ஏலத்தில், 45 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை அதிகபட்சமாக ரூ.1,580 க்கு விற்பனையானது. 1,200 மூட்டைகள் வந்தன.
இதுகுறித்து, கூட்டுறவு விற்பனைச் சங்க அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த ஜனவரி மாதம் 19ம் தேதி மூட்டை ஒன்று ரூ.2,160க்கு விற்பனை ஆனது. அதன் பின் ரூ.2,000த்திற்கும் கீழ் தான் மூட்டை விற்பனை ஆனது. கடந்த 6ம் தேதி தான் மூட்டை மீண்டும் ரூ.2,000ஐ தொட்டது. தற்போது டிமாண்ட் இல்லாததால் மீண்டும் விலை குறைந்து மூட்டை ஒன்று ரூ.1,580க்கு விற்பனை ஆனது என்றார்.
---
