/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழந்தைகளை நன்றாக படிக்க வையுங்க! பெற்றோருக்கு கலெக்டர் அறிவுரை
/
குழந்தைகளை நன்றாக படிக்க வையுங்க! பெற்றோருக்கு கலெக்டர் அறிவுரை
குழந்தைகளை நன்றாக படிக்க வையுங்க! பெற்றோருக்கு கலெக்டர் அறிவுரை
குழந்தைகளை நன்றாக படிக்க வையுங்க! பெற்றோருக்கு கலெக்டர் அறிவுரை
ADDED : ஜூலை 10, 2024 10:17 PM

கிணத்துக்கடவு : கோவையில் தயாரிப்பு தொழிற்சாலைகள் ஏராளம் உள்ளதால், வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே, பெற்றோர், குழந்தைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும், என, கோவை கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
கிணத்துக்கடவு, கோவில்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் தலைமையில், மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.
இதில், பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி, கிணத்துக்கடவு தாசில்தார் சிவகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சதீஷ்குமார், விஜய்குமார், கோவில்பாளையம் ஊராட்சி தலைவர் சுரேஷ்குமார் மற்றும் அரசு துறை அலுவலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
முகாமில், 366 பயனாளிகளுக்கு, 3.85 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மாவட்ட கலெக்டர் மற்றும் எம்.பி., வழங்கினர். இறுதியில், பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர்.
மனு வழங்கும் போது, மக்கள் பலர் முந்தி செல்ல முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இறுதியில், அதிகாரிகளே மக்களிடம் சென்று மனுக்களை பெற்றனர்.
முகாமில், பொள்ளாச்சி எம்.பி., பேசும்போது, ''தமிழகத்தில் உள்ள அரசு திட்டங்கள் அனைத்தும் மக்களிடம் கொண்டு செல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மக்களுக்கு வழங்கப்படும் திட்டங்களில் குறைகள் ஏதேனும் இருப்பின் அதை விரைவில் சரி செய்யப்படும்,'' என்றார்.
மாவட்ட கலெக்டர் பேசியதாவது: வாரம் தோறும் திங்கட்கிழமை நாளன்று மக்கள் குறைகள் குறித்து, சப்-கலெக்டர் அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் பெறப்பட்டு அதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், மக்கள் குறைகளை போக்க, 5 ஊராட்சிக்கு ஒரு இடத்தில் முகாம் நடத்தி மனுக்கள் பெற்று, உரிய அலுவலர்கள் வாயிலாக பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படுகிறது.
பெற்றோர் அனைவரும் தங்கள் குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும். இதற்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்துள்ளது. தற்போது, கோவையில் தயாரிப்பு தொழிற்சாலைகள் ஏராளம் உள்ளது. இங்கு வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே, பெற்றோர் குழந்தைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும்.
இவ்வாறு, பேசினார்.