/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சேயை காக்கும் தாயான மாரியம்மன்!
/
சேயை காக்கும் தாயான மாரியம்மன்!
ADDED : மார் 04, 2025 10:09 PM

உலகின் திருமுகமாய், பல கலைகள் பல மதங்கள் செழித்தோங்கும் நம் பாரத பொன்னாட்டின் தென் கோடியில் ஆன்மிகத்தின் அரணாய் விளங்குகிறது தமிழகம்.
தமிழகத்தில் பல்வகைச் சிறப்பும், பாங்குறத் திகழும் கொங்கு மண்டலத்தின் மேற்புற எல்லையாகத் தென்வடலாக நீண்டு கிடக்கும் மேற்கு தொடர்ச்சிமலையின் தென்பால் அமைந்திருக்கும் அழகு தவழும் ஆனைமலைத் தொடரின் அடியில் அமைந்திருக்கிறது பொள்ளாச்சி நகரம்.
இப்பகுதி மக்கள், நன்னாட்டு பாலக்காட்டின் வழியாய், மேற்கு கடல் வரை சென்று உள்நாட்டு வாணிபம் புரிந்தனர். இவர்களது வாணிப பொருட்கள், கடல் கடந்து உரோமானிய நாடு உள்ளிட்ட நாடுகளுக்கு எல்லாம் சென்றதால் வெளிநாட்டுசெல்வம் உள்நாட்டுக்கு ஏராளமாய் வந்தது.
இந்த நகர் அமைந்துள்ள புவியியல் சிறப்பால், தென்மேற்குப் பருவ மழையும், வடகிழக்குப் பருவ மழையும் ஆண்டுதோறும் கைகோர்த்து பெய்யும். நிலம் குளிர்ந்து, மரம் உயர்ந்து, செடி செழித்து, கொடி தழைத்து எங்கு நோக்கினாலும் வாசம் நிறைந்த பொழிலாய்த் தோற்றம் தந்தது.
தென் திசையில்...
பரம்பொருளின் பல்வகை நாமங்கள், அதன் பெருமையால் பிறப்பெடுத்து அப்பெருமையை மேலும் உயர்த்துவதுபோல், பொள்ளாச்சி நகரின் பல்வகை பெயர் தோற்றங்கள், அதன் பெருமையால் பிறப்பெடுத்து, அப்பெருமையை மேலும் உயர்த்துவதாய் மிளிர்வதை காணலாம்.
இத்தகைய தொல்பெருமை துவங்கும் பொள்ளாச்சி நகரில் தெற்கு எல்லையில் வீற்றிருந்து அருள்மாரி அன்னை அருள் பாலித்திருக்கிறாள்.
முன்னொரு காலத்தில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலும், அம்மை வார்த்து அவதியுற்ற போது, நகரின் தென்கோடியில் அருள்பாலித்த அம்மனை மக்கள் வழங்கினர். அம்மன் அருள்பிரசாதமாக தீர்த்தம், திருநீறு, வேப்பிலை பெற்றுச்சென்று, அம்மை வார்த்தவர்களுக்கு கொடுத்தனர். பிணி நீங்கி, மறுவாழ்வு பெற்றவர். மக்கள் அனைவரும் அம்மை போக்கிய தாயே மாரியம்மனாக வழிபட்டதாக ஸ்தல வரலாறு கூறுகின்றனர்.
திருப்பணி
காலத்தின் வளர்ச்சியால், நகர் விரிவடைந்து தெற்கே குடியிருப்புகள் அமைந்ததனால், அன்னை திருக்கோயில் அமைந்திருந்த பகுதி தற்போது கடைவீதியாய் காட்சியளிக்கிறது.
பொள்ளாச்சி கடைவீதியிலிருந்து, வால்பாறை நெடுஞ்சாலை சந்திப்பில், நகரின் மையமாய், தற்போது அன்னையின் திருக்கோயில் அமைந்துள்ளது.
கடந்த, 300 ஆண்டுகளுக்கு மேலாக, ஓடுகள் விளைந்த கோவிலில் வீற்று இருந்து ஆட்சி செய்த அம்மன், அருட் பீடத்தை கல் கோவிலாக மாற்றி அமைக்க அன்பர்கள் அஞ்சி இருக்க கூடும் என அறிய முடிகிறது.
கடந்த, 1945ம் ஆண்டு வரை இதே நிலையில் கோவில் இருந்தது. அதே ஆண்டு, மறைந்த நாச்சிமுத்து கவுண்டர், அன்னையின் அருளாசியோடு கோவிலை புதுப்பிக்கும் திருப்பணியை துவங்க முன்வந்தார்.
அன்னைக்கு விழா
அன்னை வீற்று இருக்கும் பீடத்தை மாற்றாமல், இருக்கும் இடத்திலேயே கருவறை அமைத்து, மூலஸ்தானத்தின் மீது விமான கோபுரம், உள் பிரகாரம், முன் மண்டபம், நுழைவு வாயில், ராஜகோபுரம், வெளிப்பிரகார மண்டபம் ஆகியவை கற்றளி முறையில் அமைக்கப்பட்டது.
சிற்பக்கலை வேலைப்பாடுகளுடன் கடந்த, 1953ம் ஆண்டு ஜூலை, 3ம் தேதி மஹா கும்பாபிேஷகம் நடத்தப்பட்டது.
உயரமான கருவறையில், ஒரு கால் மடக்கி அமர்ந்த கோலத்தில் அன்னை அருள் மழை பொழிகிறாள். கோவில் வளர குடி விளங்க துவங்கியதால், தேர் விழாவும் பெருவிழாவாக கொண்டாடும் முறை துவங்கியது.