/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
/
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : மே 23, 2024 11:04 PM
மேட்டுப்பாளையம்:சிறுமுகைப்புதூரில் மிகவும் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டன. கோவில் கும்பாபிஷேக விழா கடந்த, 21ம் தேதி பிள்ளையார் வழிபாடுடன் துவங்கியது.
பவானி நதியிலிருந்து புனித நீர் எடுத்து வந்து, கோவிலை சுத்தம் செய்தனர். பின்பு முளைப்பாளிகையை ஊர்வலமாக எடுத்து வந்து பூஜைகள் செய்தனர்.
பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள் அருள் ஆசியுடன், மூலத்துறை குழந்தைவேல், சக்தி வேல் ஆகியோர் யாக வேள்வி பூஜைகளை செய்தனர். 22ம் தேதி காலை சுவாமிகளின் திருமேனிகளுக்கு காப்பு அணிவிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து நாதஸ்வர மேள தாளங்கள் முழங்க, யாக சாலையிலிருந்து தீர்த்த குடங்களை கோவிலை சுற்றி எடுத்து வந்தனர்.
பின்பு கோபுர கலசத்துக்கும், சுவாமிகளின் திருமேனிகள் மீதும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். அதைத் தொடர்ந்துமகா அபிஷேகமும், அலங்கார பூஜையும் நடந்தது.
விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை சிறுமுகைப்புதூர் ஊர்கவுடர், ஸ்ரீ கோதண்ட ராமர் கோவில் நிர்வாக கமிட்டியினர், ஊர் பொதுமக்கள் ஆகியோர் செய்து இருந்தனர்.