/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அடுத்த மாதம் கோவைக்கான மாஸ்டர் பிளான்! இறுதிக்கட்டத்தில் தயாரிப்பு பணி
/
அடுத்த மாதம் கோவைக்கான மாஸ்டர் பிளான்! இறுதிக்கட்டத்தில் தயாரிப்பு பணி
அடுத்த மாதம் கோவைக்கான மாஸ்டர் பிளான்! இறுதிக்கட்டத்தில் தயாரிப்பு பணி
அடுத்த மாதம் கோவைக்கான மாஸ்டர் பிளான்! இறுதிக்கட்டத்தில் தயாரிப்பு பணி
UPDATED : பிப் 25, 2025 06:26 AM
ADDED : பிப் 24, 2025 11:56 PM

கோவைக்கான மாஸ்டர் பிளான், அனைவரது எதிர்பார்ப்பையும் நிறைவு செய்யும் வகையில், விரைவில் வெளியிடப்படவுள்ளது.'மாஸ்டர் பிளானை' இறுதி செய்வதற்காக, வெவ்வேறு நகரங்களை சேர்ந்த ஐந்து உதவி இயக்குனர்கள் மற்றும், 12 நகர திட்டமிடுநர்கள், 'டெபுடேஷன்' அடிப்படையில், 28ம் தேதி வரை பணிபுரிய உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை நகர வளர்ச்சியின் அடிப்படையான மாஸ்டர் பிளான், 1999ம் ஆண்டு புதுப்பித்திருக்க வேண்டும். ஆனால், 26 ஆண்டுகள் கடந்தும் புதுப்பிக்கப்படவில்லை. இது, கோவை நகர வளர்ச்சிக்கு, மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகர மக்கள் தொகை, 30லட்சமாக இருந்தாலும், வந்து செல்லும் புழக்கத்திலுள்ள மக்கள் தொகை, 50 லட்சமாகும். அடுத்த, 15 ஆண்டுகளில், 70 லட்சத்திலிருந்து ஒரு கோடியை எட்டிப்பிடிக்கலாம் என்று, கணக்கெடுப்புகளில்தெரியவந்துள்ளது. அதற்கேற்ப, உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதோடு, மக்களின் வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
உள்ளூர் திட்டக்குழுமம், மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து பல மாதங்களாக, வெவ்வேறு அரசு துறையினருடன் இணைந்து, ஒரு வரைவு மாஸ்டர் பிளானை உருவாக்கியது.
இது, கோவை மாவட்ட நிர்வாகத்தால், 2023 அக்.,ல்தமிழக அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதனை, 2024 பிப்., 11ல் தமிழக அரசு இறுதி செய்தது. அதற்கான பிரத்யேக இணையதளம் வாயிலாக வெளியிட்டது. இந்த அறிக்கையை மக்கள் பார்க்கவும், தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும், மே 15, 2024 வரை, அவகாசம் வழங்கியது.
இதையடுத்து, அந்த அறிக்கையின் மீது தொழில்துறையினர், கட்டுமானத்துறையினர், விவசாயிகள் மற்றும் பலரும், தங்களது ஆட்சேபணைகள் மற்றும் ஆலோசனைகளை தெரிவித்தனர்.
மொத்தம் 3,500 பரிந்துரைகள் பெற்று, இறுதி செய்யும் பணிகளில், மற்ற நகரங்களை சேர்ந்த ஐந்து உதவி இயக்குனர்கள், 12 நகர திட்டமிடுனர்கள் 'டெபுடேசன்' முறையில், 28ம் தேதி வரை பணிபுரிய உத்தரவிடப்பட்டுள்ளது.
கலெக்டர் பவன்குமார் கூறியதாவது:
கோவைக்கான மாஸ்டர் பிளான், அனைத்து வரைவு திட்டங்களுடன், அரசிடம் தயார் நிலையிலுள்ளது. தொழில்துறையினர் மற்றும் மக்களிடமிருந்து சென்ற, அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. அது, மாஸ்டர் பிளானில் பதிவேற்றப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகள் எவை, தொழிற்சாலை பகுதிகள் எவை என, இறுதி செய்யும் பணி நடக்கிறது. அனைவரது எதிர்பார்ப்புகளையும், பூர்த்தி செய்யும் வகையில், மாஸ்டர் பிளான் இருக்கும். மார்ச் 31க்குள் வெளியிடப்படும். இவ்வாறு, கலெக்டர் கூறினார்.
- நமது நிருபர் குழு -

