/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாசியில் அம்மன் மனம் குளிரும்!
/
மாசியில் அம்மன் மனம் குளிரும்!
ADDED : மார் 04, 2025 10:09 PM

மாரியம்மன் கோவிலின் ராஜகோபுர வாயிலில் உள் நுழைந்தால், துவ ஜஸ்தம்பத்தை கடந்து முன் மண்டபம் உள்ளது. அங்கு சன்னதியின் இருபுறமும் விநாயகர், முருகப்பெருமான், துவார பாலகிகளை தரிசிக்கலாம்.
உள் சுற்றுப்பாதையில் வரும் வகையில் மண்டபத்தின் மேற்கு புறம் அழகிய சிறு மண்டப அமைப்பில் வீற்று இருக்கும், செப்பிலான அம்மன் சிலைகளை தரிசித்து மகிழலாம்.
கோவிலின் கிழக்கு வாயிலை கடந்து வெளியே வந்தால், பெரிய கருங்கல் திருமண்டபம் உள்ளது.
திறந்தவெளியில் வடகிழக்கு மூலையில், அரசு, வேம்பு எனும் இரு மரங்களின் அடியில் அமர்ந்து விநாயாகப்பெருமானும், எதிர்புறம் வடக்கு நோக்கியே சன்னதியில் இருந்து அங்காள பரமேஸ்வரி அம்மனும் அருள்பாலிக்கிறார். இக்கோவிலுக்கு விநாயகர், அங்காள அம்மன், மாரியம்மன் கோவில் என பெயர் பெற்றது.
உத்தரவு கிடைக்கல
கோவில் வளாகத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு விமானம் இருக்காது. திருப்பணிகளின் போது விமானம் எழுப்ப உத்தரவு கேட்ட போது, அதற்கு அன்னையின் உத்தரவு கிடைக்கவில்லை என்பதிலிருந்து, விண்முட்டி நிற்கும் அம்மனின் அருளாட்சியை கட்டுக்குள் கொண்டு வருவதை விரும்பவில்லை என்பது தெளிவானதால், இன்றுவரை விமானம் கட்டவில்லை.
மாசியில் விழா
கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் அம்மனுக்கு விழா எடுக்கப்படுகிறது. திருக்கல்யாணத்துக்கு பின், தேரில் எழுந்தருளும் அம்மன், விநாயகர் துணையுடன் மூன்று நாட்கள் ஊரை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அதன்பின், அம்மனை குளிர்விக்கும் வகையில், தெப்பத்தேர் வைபவம், மஞ்சள் நீராடுதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
நவராத்திரி விழா
கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஒன்பது நாட்களும், மாரியம்மனுக்கு ஒன்பது வகையான அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்.
நவராத்திரியையொட்டி, ஆன்மிக சொற்பொழிவுகள், இசை கலைஞர்களின் கானமழை, நாதஸ்வர கலைஞர்களின் கச்சேரி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. நவராத்திரி விழா கலைகளை வளர்க்க கூடிய விழாவாக கோவிலில் கொண்டாடப்படுகிறது.