/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குறுகிய ரோடுகளில் முளைக்கும் 'மெகா' கட்டடங்கள்; கைகட்டி வேடிக்கை பார்க்கும் மாவட்ட நிர்வாகம்
/
குறுகிய ரோடுகளில் முளைக்கும் 'மெகா' கட்டடங்கள்; கைகட்டி வேடிக்கை பார்க்கும் மாவட்ட நிர்வாகம்
குறுகிய ரோடுகளில் முளைக்கும் 'மெகா' கட்டடங்கள்; கைகட்டி வேடிக்கை பார்க்கும் மாவட்ட நிர்வாகம்
குறுகிய ரோடுகளில் முளைக்கும் 'மெகா' கட்டடங்கள்; கைகட்டி வேடிக்கை பார்க்கும் மாவட்ட நிர்வாகம்
UPDATED : ஜூலை 08, 2024 06:37 AM
ADDED : ஜூலை 07, 2024 10:39 PM

கோவை நகருக்குள் குறுகலான ரோடுகளில், பல அடுக்கு மாடிக் கட்டடங்கள் கட்டப்பட்டு வரும் நிலையில், இவற்றை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டிய மாவட்ட நிர்வாகம், கைகட்டி வேடிக்கை பார்த்து வருகிறது.
தமிழகத்தில் நகர்ப்புற ஊரமைப்புச் சட்டத்தின்படி, அணுகுசாலையின் அகலத்தைப் பொறுத்தே, பல அடுக்கு மாடிக் கட்டடங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதை மீறி, வாங்கிய அனுமதிக்கு மாறாகக் கட்டப்படும் கட்டடங்களை தடுக்க வேண்டியதும், இடிப்பது, சீல் வைப்பது போன்ற நடவடிக்கை எடுப்பதும், நகர ஊரமைப்புத்துறையின் பொறுப்பாகும்.
இத்தகைய அனுமதியற்ற, விதிமீறல் கட்டடங்களுக்கு கடிவாளம் போட வேண்டுமென்ற ஐகோர்ட் உத்தரவின்படியே, 2019ல், தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகள் கொண்டு வரப்பட்டன. அதன்படி, பெரிய குடியிருப்புக் கட்டடங்கள், சிறிய வணிகக் கட்டடங்களுக்கும், கட்டட நிறைவுச் சான்று பெற வேண்டுமென்பது கட்டாயமாக்கப்பட்டது.
ஆனால் தமிழக அரசு அதிலும் திருத்தம் கொண்டு வந்து, அளவுக்கு அதிகமான பரப்பிலான குடியிருப்பு மற்றும் வணிகக் கட்டடங்களுக்கு, விலக்கு அளித்துள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் கோவையில் அனுமதியற்ற, விதிமீறல் கட்டடங்கள் எதன் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில்தான், அனுமதியற்ற கட்டடங்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை, சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது.
அதையடுத்து, இதற்காக மாவட்டந்தோறும் உயர்மட்ட கமிட்டி அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது. கலெக்டர் தலைமையிலான இக்குழுவில், மாநகராட்சி கமிஷனர், போலீஸ் கமிஷனர் அல்லது எஸ்.பி., நகர ஊரமைப்பு துணை இயக்குனர், நகராட்சி நிர்வாகங்களின் மண்டல இயக்குனர், வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட பலரும் இடம் பெற்றிருக்க வேண்டுமென்று கூறப்பட்டிருந்தது.
பட்டா மற்றும் அரசு நிலத்தில் அனுமதியின்றிக் கட்டப்பட்டவை, வீடுக்கு அனுமதி பெற்று வணிகக் கட்டடமாக மாற்றப்பட்டவை, விதிமீறி கட்டப்பட்ட வணிகக் கட்டடங்கள், அடுக்குமாடிக் கட்டடங்களை இக்குழு ஆய்வு செய்ய வேண்டும்; மாதம் ஒரு முறை கூடி, இந்த கட்டடங்களுக்கு நோட்டீஸ் கொடுப்பது, சீல் வைப்பது போன்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசாணை கூறியுள்ளது.
கோவையில் கடந்த மே மூன்றாவது வாரத்தில், இதற்கான கமிட்டி அமைக்க கலெக்டர் உத்தரவிட்டார். ஆனால் அப்படி ஒரு கமிட்டி அமைக்கப்பட்டதாகவே தெரியவில்லை.
ஏற்கனவே கடுமையான போக்குவரத்து நெரிசல் உள்ள கோவையில், 20 அடி, 30 அடி குறுகலான ரோடுகளில் 'மெகா' வணிகக் கட்டடங்கள் கட்டப்படுவதால், நெரிசல் மேலும் அதிகரித்து வருகிறது.
ஏதாவது விபரீதம் ஏற்பட்ட பிறகுதான், இவற்றை ஆய்வு செய்ய வேண்டுமென்று, மாவட்ட நிர்வாகம் காத்திருக்கிறதா என்பதே மக்களின் கேள்வி!
-நமது நிருபர்-