/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அசுர வேகத்தில் அச்சுறுத்தும் டிப்பர் லாரிகள்
/
அசுர வேகத்தில் அச்சுறுத்தும் டிப்பர் லாரிகள்
ADDED : செப் 05, 2024 12:07 AM

அன்னுார் : அசுரவேகத்தில் சென்று மக்களை அச்சுறுத்துவதாக டிப்பர் லாரி ஓட்டுநர்கள் மீது கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.இதையடுத்து அந்த லாரிகளை கிராம மக்கள் சிறை பிடித்தனர்.
அன்னுார் தாலுகா அ. மேட்டுப்பாளையம் கிராமத்தில் உள்ள 50 ஏக்கர் பரப்பளவு குட்டையில் பொக்லைன் இயந்திரங்கள் மண் எடுத்து டிப்பர் லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தன. அப்போது அங்கு திரண்ட கிராம மக்கள், மண் லோடு ஏற்றி வரும் டிப்பர் லாரிகள் அசுர வேகத்தில் செல்கின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளோம். மேலும் புழுதி புயல் மற்றும் புகை மண்டலத்தை ஏற்படுத்தி பாதையில் நடந்து செல்ல முடியாதபடி செல்கின்றனர்.
இதுகுறித்து கேள்வி கேட்டால் தகாத வார்த்தைகளால் திட்டுகின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி குளத்தில் இருந்த மூன்று பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் எட்டு லாரிகளை வெளியே விடாமல் சிறை பிடித்தனர்.
தகவல் அறிந்து அன்னுார் வடக்கு வருவாய் ஆய்வாளர் திவ்யா, கிராம நிர்வாக அலுவலர் ரெனிஸ், போலீஸ் எஸ்.ஐ., செந்தில்குமார் ஆகியோர் பேச்சு நடத்தினர்.
அசுரவேகத்தில் செல்லும் டிப்பர் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இனி யாரும் தகாத வார்த்தையால் திட்டாதபடி அறிவுறுத்தப்படுவர். இன்று (நேற்று) இந்த குளத்தில் யாரும் மண் எடுக்கக் கூடாது என தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். சிறை பிடிக்கப்பட்ட டிப்பர் லாரிகள் மற்றும் பொக்லைன் இயந்திரங்கள் விடுவிக்கப்பட்டன.
இந்நிலையில் வாக்கனாங் கொம்பில் தினமும் நூற்றுக்கணக்கான முறை டிப்பர் லாரிகள் சென்று வருவதால் பாதை சேதமடைந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் ஆவேசம் அடைந்த கிராம மக்கள் டிப்பர் லாரிகளை சிறை பிடித்தனர்.
கிராம நிர்வாக அலுவலர், போலீஸ் எஸ்.ஐ., செந்தில் ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர். கிராம மக்கள், அதிகாரிகளிடம் கூறுகையில், 'தினமும் ஏராளமான டிப்பர் லாரிகள், நூற்றுக்கு மேற்பட்ட முறை இந்த பாதையில் சென்று வருகின்றன. இதனால் இந்த சாலை சேதமடைந்து விட்டது. மேலும் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக மண் எடுக்கின்றனர். முறையான அனுமதி இல்லை,' என்று புகார் தெரிவித்தனர். டிப்பர் லாரி உரிமையாளர்கள் அரசிடம் பெற்ற அனுமதியை அதிகாரிகளிடம் காண்பித்தனர்.
மண் எடுக்க உரிய அனுமதி இருக்கிறது. எனினும் பாதி லாரிகளை வேறு வழியில் பாதை சேதமடையாதபடி இயக்கும்படி போலீசார் அறிவுறுத்தினர். பாதை சேதமடைந்தது குறித்து மனுவாக எழுதித் தரும்படி கிராம மக்களுக்கு அறிவுறுத்தினர். இதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.